பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 / புத்தரின் வரலாறு

ஜாதகம் என்னும் உட்பிரிவுக்கு ஜாதகாத்த கதா என்னும் உரையை ஆசாரிய புத்த கோஷர் எழுதினார்.

நித்தேசம் என்னும் பிரிவுக்கு ஸத்தம்ம பஜ்ஜோதிகா என்னும் உரையை உபசேனர் என்பவர் எழுதினார்.

படிஸம்ஹித மக்கம் என்னும் பிரிவுக்கு ஸத்தம்ம பகாஸினீ என்னும் உரையை மகாநாமர் என்பவர் எழுதினார்,

அபதானம் என்னும் பிரிவுக்கு விசுத்தசன விலாஸினீ என்னும் உரையை ஒருவர் எழுதினார். அவர் பெயர் தெரியவில்லை.

புத்த வம்சம் என்னும் பிரிவுக்கு மதுராத்த விலாஸினி என்னும் உரையை சோழநாட்டுத் தமிழராகிய ஆசாரிய புத்ததத்த தேரர் எழுதினார்.

சரியா பிடகம் என்னும் பிரிவுக்கும் பரமார்த்த தீபனீ என்னும் உரையை ஆசாரிய தம்மபால மகாதேரர் எழுதினார்.

3. அபிதம்ம பிடகம்

இது தம்ம ஸங்கினீ, விபங்கம், கதாவத்து, புக்கல பஞ்ஞத்தி, தாதுகதா, யமகம், பட்டானம் என்னும் ஏழு பிரிவையுடையது. இந்த ஏழு பிரிவுகளுக்கும் ஆசாரிய புத்த கோஷர் உரை எழுதியிருக்கிறார். முதல் பிரிவுக்கு அத்த சாலினீ என்னும் உரையையும், இரண்டாவது பிரிவுக்கு ஸம்மோஹ வினோதனி என்னும் உரையையும், மற்ற ஐந்து பிரிவுகளுக்குப் பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையையும் எழுதினார்.

இவையன்றித் தேரவாத பெளத்தத்தில் வேறு சில நூல்கள் பாலிமொழியில் உள்ளன. விரிவஞ்சி அவற்றின் பெயரைக் கூறாது விடுகின்றோம். மகாயான பௌத்த மத நூல்களும்பல உள்ளன. அவைகளையும் இங்குக் கூறாது விடுகின்றோம்.