பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 / புத்தரின் வரலாறு

மனம் வாக்கு காயங்களினால் தீய காரியங்களைச் செய்யாமல் இம் மூன்றினையும் அடக்கி ஆள்கிறவர் யாரோ அவரை நான் பிராமணன் என்று அழைக்கிறேன்.

மயிரை வளர்ப்பதனாலோ, பிறப்பினாலோ, கோத்திரத்தினாலோ ஒருவர் பிராமணர் ஆகமாட்டார். யாரிடத்தில் உண்மையும் அறநெறியும் இருக்கிறதோ அவரே தூய்மையானவர். அவர்தான் பிராமணர் ஆவார்.

எந்தப் பிராணியையும் அடித்துத் துன்புறுத்தாமலும் கொல்லாமலும் கொல்லச் செய்யாமலும் இருக்கிறவர் யாரோ அவரை நான் பிராமணன் என்று அழைக்கிறேன்.

முன்பும் பின்பும் எப்போது பற்றுகள் இல்லாமல், உலக ஆசைகளை நீக்கிப் பற்றற்றவர் யாரோ அவரையே பிராமணன் என்று கூறுகிறேன்.

ஒருவர் புத்த தர்மங்களை முழுவதும் கற்று மிக உரக்க ஓதி உபதேசித்தாலும் அவர் அச்சூத்திரங்கள் கூறுகிறபடி நடக்கவில்லையானால், பிறருடைய பசுக்களைக் கணக்கெண்ணிக் கொண்டிருக்கும் இடையனையொப்ப, துறவிகள்அடையவேண்டிய பலனை அடையமாட்டார்.

ஒருவர், புத்த தர்மங்களைச் சிறிதளவு ஓதினாலும் அவை கூறுகிறபடி நடந்து, ஆசை பகை மோகம் முதலியவைகளை நீக்கி, நற்காட்சி பெற்று மனமாசு அற்று இருவகைப் பற்றுக்களையும் விட்டவரானால், அவரே உண்மையில் துறவிகள் அடையும் உயர்ந்த பலனை அடைவார்.