பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 21

பிறகு சுத்தோதன அரசர் ஒரு நன்னாளில் மகாநாமரிடம் தூதுவரை அனுப்பி, தமது குமாரனுக்கு அவருடைய குமாரத்தியை மணம் செய்துகொடுக்கும்படி கேட்டார். மகாநாமர் இவ்வாறு விடை கூறினார்: "சாக்கியகுலத்தில் ஒரு வழக்கம் உண்டு. படைக்கலப் பயிற்சியில் யார் ஒருவர் சிறந்த வீரரோ அவருக்குத்தான் மணமகள் உரிமையானவள். படைக்கலப் பயிற்சி யறியாதவருக்குமணமகள் உரியவளல்லள், அரசகுமாரன், வில்வித்தை மல்யுத்தம் முதலியவற்றில் மனம் செலுத்தாமலும் அவற்றைப் பயிலாமலும் இருக்கிறார் என்று அறிகிறேன். இப்படிப்பட்டவருக்கு என் மகளை எப்படி மணஞ் செய்துகொடுப்பேன்?"

மகாநாமர் கூறிய இந்தச் செய்தியைத் தூதுவர் வந்து சுத்தோதன அரசருக்குத் தெரிவித்தார்கள். இதைக்கேட்ட சுத்தோதன அரசர் தமக்குள், "மகாநாமர் சொல்லியது முழுதும் உண்மைதான். இதற்கு என்ன செய்வது!" என்று சொல்லிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.

அரசர் கவலையோடு இருப்பதைச் சித்தார்த்த குமாரன் அறிந்தார். அரசரை அணுகிக் காரணத்தை வினவினார். அரசர் காரணத்தைக் கூறவில்லை. குமாரன் மீண்டும் மீண்டும் வினவினார். கடைசியாக அரசர் காரணத்தை விளக்கிக் கூறினார். காரணத்தையறிந்த குமாரன் "மகாராஜா! பறையறைந்து படைக்கலப் போட்டியை ஏற்படுத்துங்கள். நான் அதில் வெற்றியடைவதைப் பாருங்கள்" என்று கூறினார்.

அரசர் பெருமகிழ்ச்சியடைந்து, குமாரனைப் பார்த்து "மகனே, வீரர் அரங்கத்தில் நீ வெற்றி பெறுவாயா?" என்று ஆவலாகக் கேட்டார்.

"மகாராஜரே! அரங்கத்திற்கு நாள் குறிப்பிடுங்கள். படைக்கலப் பயிற்சி எல்லாவற்றிலும் நான் வெற்றியடைவதைப் பார்ப்பீர்கள்" என்றார் குமாரன்.

படைக்கலப் போட்டி

அரசர் பெருமகிழ்வெய்தினார். பிறகு பறையறைவித்துப் படைக்கலப் போட்டி நிகழப்போகும் நாளைத் தெரிவித்தார். அந்நாளும் வந்தது. படைக்கலப் பயிற்சியிலும் போர்ப்பயிற்சியிலும் சிறந்த சாக்கிய குமாரர்கள் எல்லோரும் களத்திற்கு வந்தார்கள். சித்தார்த்த குமாரனும் வந்தார். சுத்தோதன அரசரும் வந்தார். வேடிக்கை பார்ப்பதற்கு நாட்டிலுள்ள எல்லோரும் வந்திருந்தார்கள்