பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 25

யாரேனும் உளரோ? இருந்தால் அவர்களை எவ்வாறு வெல்வது? என்பதை ஆராய்ந்து சொல்லுங்கள்" என்று கூறினான்.

அமைச்சர்கள். ஒற்றறிந்து வரப்பல நாடுகளுக்கு ஒற்றர்களை அனுப்பினார்கள். ஒற்றர்கள் நாடெங்கும் சென்று ஆராய்ந்தனர். விம்பசார அரசனை வெல்லும் ஆற்றல் உள்ள அரசர் ஒருவரும் இலர் என்பதைக் கண்டனர். ஆனால் வடக்கே சென்ற ஒற்றர்கள் இந்தச் செய்தியை அறிந்தார்கள்: இமயமலைச் சாரலில் சாக்கிய ஜனபதத்தில் கபிலவத்து நகரத்தில் சுத்தோதன அரசருக்கு ஒரு குமாரன் பிறந்திருப் பதையும் அக்குமாரனின் திருமேனியிலே முப்பத்திரண்டு மகாபுருஷ லக்ஷணங்கள் அமைந்திருப்பதையும் இக்குமாரன் இல்லற வாழ்க்கையில் இருந்தால் அரசர்களை வென்று சக்கரவர்த்தியாக விளங்குவார் என்றும், துறவறம் மேற்கொண்டால் பெறுதற்கரிய புத்த பதவியை அடைவார் என்றும் நிமித்தகர் கணித்துக் கூறியிருப்பதையும் ஒற்றர்கள் அறிந்தார்கள். உடனே மகத நாட்டிற்கு விரைந்து வந்து இச்செய்திகளை அமைச்சர்களுக்குக் கூறினார்கள்.

அமைச்சர்கள் விம்பசார அரசனுக்கு இச்செய்தியைத் தெரிவித்து உடனே நால்வகைச் சேனைகளைப் பலப்படுத்தும்படியும் சக்கரவர்த்தியாகப் போகிற சிறுவனை விரைவில் அழிக்க வேண்டும் என்று யோசனை கூறினார்கள்.

விம்பசாரன் அரசன் இதைப்பற்றி நேடுநேரம் யோசித்தான். கடைசியில் அமைச்சரிடம் இவ்வாறு கூறினான்: சித்தார்த்தகுமாரன் மீதுபோர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கிடைத்தற்கரிய சக்கரவர்த்தி பதவியை சித்தார்த்த குமாரன் பெற்றால், சக்கரவர்த்திகள் நீதிமுறைப்படி நடப்பார்களாகையினாலே, அவருக்குக் கீழடங்கி நாம் அரசாட்சியை நடத்தலாம். அவர் துறவு பூண்டு புத்த பதவியை யடைந்தால், அவரிடம் அறநெறி கேட்டு அவருக்குச் சீடராகலாம். ஆகவே, இரண்டு விதத்திலும் நமக்கு நன்மையே."

இவ்வாறு விம்பசாரன் அரசன் கூறியதைக் கேட்ட அமைச்சர்கள் சரி என்று ஒப்புக்கொண்டார்கள்.

சித்தார்த்த குமாரன் கேட்ட தெய்விகக் குரல்

சித்தார்த்த குமாரன் உலக போகத்தில் மூழ்கி அரண்மனையிலே இன்ப சுகங்களைத் துய்த்துக்கொண்டு கவலையற்ற வாழ்க்கை வாழ்ந்தபோதிலும் நாளடைவில் அவருக்கு இல்வாழ்க்கையில் வெறுப்பு தோன்றிற்று.