பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 / புத்தரின் வரலாறு

கொள்ளாமல் தடுத்து எவ்விதத்திலும் இல்லறத்திலேயே நிறுத்த வேண்டும் என்று உறுதி கொண்டார். ஆகவே அரண்மனையிலும் நகர வாயில்களிலும் அதிகமாகக் காவலாளர்களை நியமித்து சித்தார்த்த குமரன் நகரத்துக்கு வெளியே போகாதபடி பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்தார். மேலும், அழகுள்ள இள மங்கையர் பலரை அவருக்கு ஊழியராக அமர்த்தினார்.

உலாவச் செல்லல்

ஒருநாள் சித்தார்த்த குமரன் அரண்மனைக்கப்பால் உள்ள பூஞ்சோலைக்குப் போக நினைத்தார். சன்னன் என்னும் பெயருள்ள தேர்ப்பாகனிடம் தமது எண்ணத்தைக் கூறித் தேரைக் கொண்டுவர கட்டளையிட்டார். சன்னன், குமரனின் விருப்பத்தைச் சுத்தோதன அரசருக்குத் தெரிவித்தான். அரசர், பூஞ்சோலைக்குச் செல்லும் சாலைகளில் நீர்த்தெளித்துத் தோரணங்களும் கொடிகளும் கட்டிப் பூரண கும்பங்கள் வைத்துஅலங்காரம் செய்யக் கட்டளையிட்டார். மேலும் கிழவர் நோயாளர் முதலியோர் அவ்விடத்தில் வராதபடி சேவகர்களைக் காவல் வைத்தார்.

பூஞ்சோலையைப் பழுத்த இலைகளும் காய்ந்த சருகுகளும் இல்லாதபடி தூய்மை செய்வித்தார். கொடிச்சீலைகள் கொடிகள் முதலியவற்றைக் கட்டி அழகுபடுத்தினார். பூஞ்சோலையில் ஆண் பெயருள்ள மரங்களுக்கு வேஷ்டிகள் கட்டியும் பெண் பெயருள்ள மரங்களுக்குச் சேலைகள் அணிவித்தும் அழகுபடுத்தினார். மற்றும் அப்பூஞ்சோலையின் காட்சிகளை அழகும் இனிமையும் உள்ளதாக்கினார்.

நான்கு காட்சிகள்

சன்னன் நான்கு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரைக் கொண்டுவந்து நிறுத்தினான். சித்தார்த்த குமாரன் மெல்லிய பட்டாடைகளை அணிந்து தேரில் அமர்ந்து பூஞ்சோலை காணச் சென்றார். செல்லும் வழியிலே, எந்தெந்தக் காட்சிகளை இவர் காணச் கூடாதென்று சுத்தோதன அரசர் தடுத்து வைத்தாரோ அக்காட்சிகள், தெய்வச் செயலாக இவருடைய கண்களில் தோன்றின. வழியிலே தொன்று கிழவர்கூனிக்குனிந்து தடியூன்றித் தள்ளாடி நடந்து இருமிக் கொண்டிருந்தைக் குமரன் கண்டார். நரைத்த தலையும் திரைத்த தோலும் குழிவிழுந்து பார்வையற்ற கண்களும் உடைய இந்த முதுமைக் காட்சியை இதற்கு முன்பு கண்டிராத சித்தார்த்த குமாரன், தேர்ப்பாகனை விளித்து, "சன்னா! இது என்ன?" என்று கேட்டார்.