பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 / புத்தரின் வரலாறு

அதனால், என்னுடைய துறவுக்குத் தடை ஏற்படக்கூடும். ஆகவே, நான் சென்று புத்த நிலையையடைந்த பிறகு என் மகனை வந்து காண்பேன்" என்று தமக்குள் எண்ணினார்.

சித்தார்த்தர் வெளியேறியது

உலகத்தின் நான்கு திசைகளிலும் காவல்பூண்ட சதுர்மகாராஜிக தேவர்கள், சித்தார்த்த குமாரன் இல்லறத்தை விட்டுப் போகிறதையறிந்து, தமது பரிவாரங்களுடன் கபிலவத்து நகரத்துக்கு வந்து ஒருவரும் அறியாதபடி அரண்மனையை அடைந்தார்கள். கிழக்குத் திசைக்குக் காவல்பூண்ட திருதராஷ்டிரன் என்னும் தேவன், தன்னைச் சார்ந்த கந்தர்வ பரிவாரங்களுடன் இன்னிசை பாடிக்கொண்டு ஆகாய வழியே வந்து மும்முறை அரண்மனையை வலம் வந்து தரையில் இறங்கிச் சித்தார்த்த குமாரன் இருந்த பக்கமாகத் தலைகுனிந்து கைகூப்பி வணங்கினான். தெற்குத் திசைக்குக் காவல்பூண்ட விருதாக்ஷன் என்னும் தேவன், தனது கும்பாண்டர் என்னும் பரிவாரங்களுடன் இனிய நறுமணப் பொருள்களை ஏந்திக்கொண்டு ஆகாய வழியே வந்து மும்முறை வலம்வந்து தரையில் இறங்கி அரசகுமாரனை வணங்கி நின்றாள். மேற்குத் திசைக்குக் காவல்பூண்ட விரூளாக்ஷன் என்னும் தேவன், தனது பரிவாரங்களாகிய இயக்கருடன் தீவட்டி விளக்கு முதலியவைகளை ஏந்திக்கொண்டு ஆகாய வழியே வந்து வலமாகச் சுற்றித் தரையில் இறங்கி வணங்கி நின்றான். வடக்குத் திசைக்குக் காவல் பூண்ட வைசிரவணன் என்னும் தேவன், தனது பரிவாரங்களாகிய நாகர்களுடன் நவரத்தினங்களையும் அணிகலன்களையும் ஏந்திக்கொண்டு வந்து வலமாகச் சுற்றித் தரையில் இறங்கி வணங்கி நின்றான். பின்னர், தேவ லோகத்திலிருந்து சக்கரன் (இந்திரன்) தேவர்கள் புடைசூழ தேவலோகத்து மலர்களையும் நறுமணப் பொருள்களையும் நவமணி மாலைகளையும் ஏந்திக்கொண்டு விண்ணிலிருந்து இறங்கி மும்முறை வலம்வந்து சித்தார்த்த குமாரனைக் கைகூப்பி வணங்கி நின்றான்.

இல்வாழ்க்கையின் அன்புப் பிடியினின்று மீள்வது அருமையாயினும் சித்தார்த்த குமாரன், எல்லா மக்களும் உய்வதற்கு நன்னெறியைக் காணவேண்டும் என்னும் பெருங்கருணையினாலே உந்தப்பட்டு, மகனைக்காண அறைக்குள்ளே செல்லாமல் வெளியே வந்துவிட்டார். தாம் துறவுகொண்டால் தமது சுற்றத்தாரும் மற்றவரும் மனம் வருந்துவார்கள் என்றாலும், தாம் துறவுகொள்வது உலக மக்களின் நன்மைக்காக வாதலின் இவர்களின் வருத்தத்தைப்