பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 / புத்தரின் வரலாறு

கண்ட ஒரு ஆள் இவர் இறந்துவிட்டார் என்று கருதி, இவருடைய தந்தையான சுத்தோதன அரசனிடம் சென்று, "உமது மகன் இறந்துவிட்டார்" என்று கூறினான். அரசன், "புத்தஞானம் பெற்ற பிறகு இறந்தாரா, பெறாத முன்பு இறந்தாரா?" என்று கேட்டார். "புத்தஞானம் பெறுவதற்கு முன்பே இறந்துவிட்டார்" என்று அவன் கூறினான். "போ, போ, என் மகன்புத்த ஞானம் பெறுவதற்கு முன்னர் இறக்கமாட்டார்" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

மயக்கமடைந்து கீழே விழுந்த கௌதம முனிவர் நெடுநேரஞ் சென்று மயக்கந்தெளிந்து எழுந்து தமது ஆசிரமம் சென்றார். இந்த நிலையிலும் கௌதம முனிவர் மீண்டும் அப்பிரணத் தியானம் செய்யத் தொடங்கினார். மூக்கையும் வாயையும் மூடி மூச்சையடக்கினார். அப்போது மூச்சு காதின் வழியாக வெளிப்பட்டது. காதுகளையும் கைகளினாலே அடைத்துக் கொண்டார். அதனால் சுவாசம் தலையை முட்டிற்று. தலையில் வலி உண்டாயிற்று. மூச்சு தலைக்கு மேலே போகமுடியாமல் கீழிறங்கி வயிற்றைத் துளைத்தது. அப்போது, கூரிய கத்தி கொண்டு வயிற்றைக் குத்துவது போன்று பெருத்தவலி உண்டாயிற்று. இவ்வாறு கௌதம முனிவர் அடிக்கடி அப்பிரணத் தியானத்தைச் செய்து கொண்டிருந்தார். இதனால் கடுமையான வலியும் துன்பமும்இவர் உடம்பில் ஏற்பட்டன. ஆனாலும் விடாமல் உறுதியோடு செய்து வந்தார். ஆனால், இவருடைய மனம் ஒருநிலைப்பட்டு உறுதியாக இருந்தது. இவ்வாறு உடம்பை அடக்கிக் கட்டுப்படுத்திய படியினாலே இவருடைய மனமும் கட்டுக்கடங்கி நன்னிலையில் உறுதியாக இருந்தது.

மாரன் உபதேசம்

நிர்வாணமோக்ஷம் என்னும் வீடுபேற்றினை அடைவதற்காக உடம்பையும் உயிரையும் பொருட்படுத்தாமல் அப்பிரணத்தியானத்தை மும்முரமாகச் செய்துவந்தார் கௌதம முனிவர். இவருடைய விடாமுயற்சியைக் கண்ட வசவர்த்திமாரன்[1] தனக்குள் இவ்வாறு எண்ணினான். "இந்தச் சித்தார்த்தருடைய முயற்சி மிகப்பெரிது. இவர் செய்கிற கடுமையான தியானமும் தவமும் மிகப்பெரியன. ஆகையினாலே ஒருநாள் இவர் புத்த பதவியடைவது உறுதி. இவர் புத்தராவதைத் தடுக்க வேண்டும்.


  1. மாரன் என்பவன் மனிதரைச் சிற்றின்பத்தில் மனங்கொள்ளச் செய்து பாபங்களைச் செய்யத் தூண்டுபவன்