பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 / புத்தரின் வரலாறு

மறுத்துவிட்டுக் காய்கனிகளை மட்டும் உணவாகக் கொண்டு தவம் செய்தார். இப்போது இவர் பிச்சைக்கு வருகிறார். இவர் எண்ணியிருந்த காரியம் கைகூடிவிட்டது போலும். ஆகையினாலே இவருக்கு நல்ல உணவைக் கொடுக்க வேண்டும்." இவ்வாறு நினைத்த அந்தக் கிராமத்தார் இவருக்கு நல்ல உணவைக் கொடுத்தார்கள்.

போதிசத்துவராகிய கௌதம முனிவர் கிராமத்தில் சென்று பிச்சை ஏற்று உணவு கொள்வதைக் கண்டு, இவருடன் இருந்து இவருக்குத் தொண்டு செய்துவந்த ஐந்து தொண்டர்களான தாபசர்களும் இவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள். "இவர் உடம்புக்குச் சுகம் தருகிறார். ஆகையால் இவர் அடையக் கருதியிருக்கும் நிலையை இவர் அடைய முடியாது. நாம் இனி இவரிடம் இருக்க வேண்டியதில்லை" என்று அவர்கள் தமக்குள் பேசிக்கொண்டு இவரை விட்டுப் போய்விட்டார்கள். போன இவர்கள் நெடுந்தூரத்தில் உள்ள வாரணாசி (காசி)க்கு அருகில் இருந்த இசிபதனம் என்னும் இடத்தில் தங்கினார்கள்.

உடல்நலம் அடைகிறவரையில் கௌதம முனிவர் தியானம் முதலியவை ஒன்றும் செய்யாமல் வாளா இருந்தார். உடம்பில் போதிய அளவு வலிவு ஏற்பட்டபிறகு, ஆனாபான ஸ்மிருதி தியானத்தைச் செய்யத் தொடங்கினார்.

மனத்தைப் பண்படுத்தல்

அப்போது போதிசத்துவருக்கு நைஷ்கிர்ம்யம் முதலான குசல (நல்ல) எண்ணங்கள் அவருடைய மனத்தில் ஆற்றிலே நீரோடுவது போல ஓடின. முன்பு மிகவும் வற்றிப்போயிருந்த தமது உடம்பு இப்போது நன்னிலையடைந்திருக்கிறது என்று நினைத்தார். உடனே, இவ்வாறு உடம்பைப் பற்றி நினைப்பது தவறு இப்படி எண்ணுவது கூடாது என்று தீர்மானித்தார். ஆசிரமத்தின் எதிரிலே மான், பசு, முயல் முதலியவை வருவதைக் கண்டார். மரங்களில் மயில் குயில் கிளி முதலிய பறவைகள் அமர்ந்து கூவுவதைக் கேட்டார். அருகில் உள்ள குளம் குட்டைகளில் தாமரை அல்லி முதலிய மலர்கள் அலர்ந்திருக்கும் இனிய காட்சியையும் எதிரில் ஓடிக் கொண்டிருக்கும் நேரஞ்சர ஆற்றின் தூய நீரோட்டத்தின் அழகிய இயற்கைக் காட்சிகளையும் கண்டார். இவையெல்லாம் அழகிய காட்சிகள் என்று அவர் மனத்தில் நினைத்தார். அப்போது, இவ்வாறு நினைப்பதுங்கூட நல்லதன்று; இப்படிப்பட்ட எண்ணங்களையும் அடக்கவேண்டும்