பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 75

மாட்டார்கள். தெரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு ஏன் வீணாகப் போதித்துக் காலங்கழிக்க வேண்டும்?

"மிகவும் வருந்தி முயன்று கைவரப்பெற்ற இந்த போதி ஞானத்தை உலகப் பற்றுக்களில் அழுந்தியிருக்கிற மக்கள் தெரிந்து கொள்ளமாட்டார்கள். ஆசையிலும் பகையிலும் அழுந்தி அடர்ந்த இருட்டிலே கிடக்கிற மக்கள் இதை அறிந்துகொள்ள மாட்டார்கள். ஆகையால் புத்த தர்மத்தைப் போதிக்காமல் வாளாயிருப்பதுதான் நல்லது."

இதைக் கேட்ட சகம்பதி பிரமன், புத்தரை வணங்கி மீண்டும் கூறினான்: "சுவாமி! போதி தர்மத்தை உலகத்தில் போதித்தருளுங்கள். உலகத்தைச் சுற்றிப் பிரயாணம் செய்து தர்மோபதேசம் செய்தருளுங்கள். பகவன் சம்புத்தரால் கண்டறியப்பட்ட தர்மத்தை மக்கள் கேட்கட்டும். அஞ்ஞான இருளினால் மறைக்கப்படாத ஞானக் கண்ணுடைய மக்களும் உலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தர்மோபதேசத்தைக் கேளாவிட்டால், நிர்வாண மோக்ஷ சுகத்தையடைய முடியாது. பகவனே! கருணை கூர்ந்து போதி ஞானத்தைப் போதித்தருளுங்கள்."

பகவான் புத்தர் முன்போலவே கூறி மறுத்தார். பிரமன் மூன்றாம் முறையும் வணங்கி முன்போலவே, உலகத்தில் தர்மோபதேசத்தைச் செய்தருளும்படி வேண்டினான்.

பிரமனுடைய வேண்டுகோளைக் கேட்ட பகவன்புத்தர், மிகவும் இரக்கமும் அன்பும் உள்ள மனத்தோடு எல்லாவற்றையும் காண்கிற புத்தஞானக் கண்கொண்டு உலகத்தை நோக்கியருளினார். நோக்கியபோது, மாசுபடியாத அறிவுடையவர்களையும் மாசுபடிந்த அறிவுடையவர்களையும், கூரிய அறிவுடையவர்களையும் மங்கிய அறிவுடையவர்களையும், நல்ல குணமுடையவர்களையும் தீய குணமுடையவர்களையும், போதனையை அறிந்துகொள்ளக் கூடியவர்களையும் அறிந்துகொள்ள முடியாதவர்களையும் கண்டார்.

தாமரை படர்ந்துள்ள பெரிய குளத்திலே நீர்மட்டத்துக்குமேல் வந்துள்ள முதிர்ந்த தாமரை மொட்டுக்கள் சூரியகிரணம் பட்டவுடன் மலர்ந்து விரிகின்றன. சில மொட்டுக்கள் சிலநாள் கழித்து முதிர்ச்சியடைந்தவுடன் சூரியகிரணம் பட்டு மலர்கின்றன.இன்னும் சில மொட்டுக்கள் நீருக்குக் கீழே இருக்கின்றன. அவை வளர்ந்து முதிர்ந்து நீர்மட்டத்துக்கு மேலே வந்து சூரியகிரணத்தினால் மலர்ச்சியடைகின்றன. இதுபோல, பகவன் புத்தர், ஞானக்கண்