பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 77

ஐந்து தாபசகர்களை நாடிப் பதினெட்டு யோசனை தூரத்தில் உள்ள காசி மாநகரத்திற்குக் கால்நடையாக நடக்கத் தொடங்கினார்.

உபகரைச் சந்தித்தல்

காசியை நோக்கி நடந்தபோது கயா என்னும் இடத்தருகிலே உபகர் என்னும் பெயருள்ள ஆஜீவகத் துறவி எதிர்ப்பட்டார். அவர் பகவன் புத்தரைப் பார்த்து, "முனிவரே! தங்களுடைய கண் முதலான பொறிகள் மிகத் தூயனவாக இருக்கின்றன. உடம்பின் நிறமும் பொன்மயமாக இருக்கிறது. தாங்கள் யாரிடத்தில் துறவு பெற்றீர்கள்? தங்கள் குருநாதன் யார்? யாருடைய உபதேசத்தைப் பின்பற்றுகிறீர்கள்?" என்று கேட்டார்.

அப்போது பகவன் பற்றர் அவருக்கு இவ்வாறு விடையளித்தார்: "நான் எல்லாப் பகைகளையும் வெற்றி கொண்டேன். நான் எல்லாவற்றையும் அறிந்தேன். நான் எல்லாவிதத்திலும் குற்றமற்றவன். எல்லாவற்றையும் துறந்தவன். ஆசைகளை நீக்கி உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன். நானே முயன்று போதியை யடைந்தபடியினாலே, யாரை எனது குருநாதன் என்று கூறுவது? எனக்குக் குருநாதன் இல்லை. மண்ணுலகத்திலும் விண்ணுலகத்திலும் எனக்கு நிகரானவர் இலர். இவ்வுலக்திலே நான் பரிசுத்தமானவன். சம்புத்த பதவியையடைந்தவன். ஆசைகளை அறுத்தபடியினாலே சாந்தியடைந்து நிர்வாண மோக்ஷத்தைப் பெற்றிருக்கிறேன், சத்தியலோகம் என்னும் இராச்சியத்தை நிறுவுவதற்காக வாரணாசி நகரத்திற்குப் போகிறேன். இந்த இருண்ட உலகத்திலே இறவாமை என்னும் முரசைக் கொட்டப்போகிறேன்."

இதனைக் கேட்ட உபகர், "முனிவரே! தாங்கள் பரிசுத்தரான உயர்ந்த அனந்தஜினன் என்று கூறுகிறீர்களா?" என்று கேட்டார்.

"எல்லா ஜினர்களும் என்னைப்போன்றே ஆசவங்களை[1] அவித்தவர்கள். நான் எல்லாப் பாவங்களையும் வென்றவன். ஆகையினாலே, உபகரே! நான் அனந்தஜினன்தான்" என்று பகவன் புத்தர் கூறினார்.

இதனைக் கேட்ட ஆஜீவகராகிய உபகர், "முனிவரே! அப்படியும் இருக்கலாம்" என்று கூறித் தலையையசைத்துத் தெற்கு நோக்கிச் சென்றார்.


  1. ஆசவம் - காமம், பவம், திட்டி, அவிஜ்ஜை என்பன