பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 79

இவ்வாறு சொல்லக்கேட்ட ஐந்து துறவிகளும், "தாங்கள் மேற்கொண்ட இந்த வாழ்க்கையினாலே, இந்தத் தபசினாலே, உயர்ந்த ஆற்றலைத் தாங்கள் அடைய முடியாது. தாங்கள் மேற்கொண்ட வாழ்க்கையினாலே ஆத்தும வளர்ச்சியை யடைய முடியாது. தாங்கள் கடுந்தபசைக் கைவிட்டு உணவை உட்கொண்டு வாழ்கிறீர்கள். இவ்வித வாழ்க்கையினாலே, ஆத்தும உணர்வையும் பரிசுத்தமான உயர்ந்த ஞானத்தையும் எவ்வாறு பெறக்கூடும்?" என்றனர்.

பகவன் புத்தர் இவ்வாறு கூறினார்: "ஒ, பிக்குகளே! ததாகதர் சுகபோக வாழ்க்கை வாழவில்லை. தபசைக் கைவிடவும் இல்லை. ததாகதர் பௌத்திரமான சம்புத்தராவார். இறவாமை என்னும் பதவியைக் கைவரப் பெற்றவராவார். உங்களுக்கு ததாகதர் காட்டும் வழியிலே நின்று ஒழுகுவீர்களானால், நீங்கள் விரைவிலே உண்மையைக் கண்டு அறிந்து உணர்ந்து அதனை நேருக்கு நேராகக் காண்பீர்கள்."

ஐந்து துறவிகளும் பகவர் கூறியதை நம்பவில்லை. முன்போலவே அவர்கள் தங்கள் ஐயப்பாட்டைக் கூறித் தெரிவித்தார்கள். பகவன் புத்தர் மூன்றாம் முறையும் மேலே கூறியது போலவே அவர்களுக்குக் கூறினார். மூன்றாம் முறையும் முனிவர்கள் நம்பாமல் தங்கள் ஐயத்தைத் தெரிவித்தார்கள்.

துறவிகள், தம்மிடம் நம்பிக்கை கொள்ளாததை அறிந்த பகவன் புத்தர் அவர்களைப் பார்த்து, "பிக்குகளே! இதற்கு முன்பு எப்போதாவது இதுபோன்று ததாகதர் பேசியது உண்டா?"

"தாங்கள் இதுபோன்று முன்பு எப்போதும் பேசியதில்லை" என்று ஒப்புக்கொண்டார்கள்.

"ஓ, பிக்குகளே! ததாகதர் பரிசுத்தமான உயர்ந்த சம்புத்தர். பிக்குகளே ததாகதருக்குச் செவிகொடுத்துக் கேளுங்கள். கேட்பீர்களானால், கிடைத்தற்கரிய நிர்வாண மோக்ஷ இன்பத்தையடையப் பெறுவீர்கள்" என்று கூறினார்.

அப்போது முனிவர்கள் பகவர்மீது நம்பிக்கை கொண்டார்கள். அவருடைய உபதேசத்தைச் செவிசாய்த்துக் கேட்க இணங்கினார்கள்.

முதல் தர்மோபதேசம்

சூரியன் மேற்கில் சென்றான். பூக்களில் தேனையுண்டு மகிழ்ந்த தேனீக்களும் வண்டுகளும் ரீங்காரம் செய்து பறந்துகொண்டிருந்தன.