பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 / புத்தரின் வரலாறு

"நிரோத சத்தியத்தில் சத்தியஞானம்:- இந்த நிரோத சத்தியத்தை ஆராய்ந்தபோது நிர்வாணம் என்கிற ஞானம் தோன்றியது. இதனால் நிரோத சத்தியத்தை அறியவேண்டும் என்னும்கிருத்திய ஞானம் தோன்றி, அதனை ஆராய்ந்து பார்த்து, இந்த நிரோத சத்தியத்தை அடைந்தேன் என்னும் கிருத ஞானம் தோன்றியது.

"மார்க்க சத்தியத்தில் சத்தியஞானம்:- பிக்குகளே! பிறகு மார்க்க சத்தியம் என்னும் ஞானம் உண்டாயிற்று. இந்த மார்க்க சத்தியத்தை நன்றாய் அறிய வேண்டும் என்னும் கிருத்திய ஞானம் உண்டாகி, அதனை நன்கு ஆராய்ந்து பார்த்தபோது, துக்கங்களை வெல்லும் மார்க்க சத்தியத்தை அடைந்தேன் என்னும் கிருதஞானம் தோன்றியது.

"பிக்குகளே! இவ்வாறு சத்தியஞானம், கிருத்திய ஞானம், கிருதஞானம் என்னும் மூன்று விதமாக நான்கு சத்தியத்துடன் பொருத்திப் பார்க்கிறபோது பன்னிரண்டு விதமான ஞானம் எனக்குத் தோன்றியது. இந்த ஞானம் எனக்குத் தோன்றாமல் இருந்த காலத்தில், தேவர், பிரமர், மாரர் இருக்கிற அந்த உலகத்திலும் சிரமணரும் பிராமணரும் இருக்கிற இந்த உலகத்திலும், நான் சம்மாசம்போதியை அடைந்ததாகச் சொல்லிக்கொள்ளவில்லை.

"சத்தியஞானம், கிருத்தியஞானம், கிருதஞானம் என்கிற மூன்றுவிதமாக நான்கு சத்தியத்தோடு பொருந்திப் பார்க்கிறபோது பன்னிரண்டு விதமாக இருக்கிற இந்தத் தத்துவ ஞானத்தை நான் எப்போது அறிந்தேனோ அப்போது, தேவர் பிரமர் மாரர் இருக்கிற அந்த உலகத்திலேயும் சிரமணர் பிராமணர் இருக்கிற இந்த உலகத்திலேயும், நான் சம்மா சம்போதியை யடைந்தேன் என்று எல்லோருக்கும் கூறினேன்.

"இந்த ஞானம் எனக்குத் தோன்றியபோது, நான் அடைந்த சம்போதி ஞானம் அழியாதது. இதுவே என்னுடைய கடைசிப் பிறப்பு: இதுவே எனது கடைசி பிறப்பு; இனி நான் பிறக்கமாட்டேன்' என்கிற மனவுறுதி ஏற்பட்டது."

இந்த உபதேசத்தைக் கேட்ட பிறகு கொண்டஞ்ஞர் என்னும் பிக்குவுக்கு அறிவுக்கண் திறந்து அவர் ஸ்ரோதா பத்திஞானம் அடைந்தார்.

வாரணாசி நகரத்திலே இசிபதனத்திலே பகவன் புத்தர் திருவாய் மலர்ந்தருளிய தர்மோபதேசத்தைக் கேட்டபோது தேவர்களும் பிரமர்களும் முனிவர்களும் சிரமணர்களும் பிராமணர்களும் சந்தோஷ ஆரவாரஞ் செய்து 'இது உண்மை, இது சத்தியம்' என்று