பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 / புத்தரின் வரலாறு

பிக்குகள்: "பகவரே! அது துன்பத்தை தருவது."

பகவன் புத்தர்: "ஒரு பொருள் அநித்தியமானதாகவும் துன்பத்தைக் கொடுக்கிறதாகவும், மாறுதல் அடைந்து கொண்டிருக்கிறதாகவும் இருந்தால் அதைக்கண்டு 'இது நான், இது என்னுடையது. இது நானே' என்று நினைப்பது சரியா?"

பிக்குகள்: "அப்படி நினைப்பது சரியல்ல."

பின்னர் வேதனை, சஞ்ஞா, சம்ஸ்காரம், விஞ்ஞானம் என்கிற மற்ற நான்கு ஸ்கந்தங்களைப் பற்றியும் பகவன் புத்தர் மேற்கண்டபடியே கேள்விகள் கேட்க, பிக்குகள் மேற்கண்டபடியே விடை கூறினார்கள். அப்போது பகவன் புத்தர் அருளிச் செய்தார்: "ஆகையினாலே, பிக்குகளே! இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும் முக்காலத்திலும் அகத்திலும் புறத்திலும் கம்பீரத்துடனும் கம்பீரம் இல்லாமலும் தாழ்ந்ததாகவும் உயர்ந்ததாகவும் அண்மையிலாயினும் சேய்மையிலாயினும் ஏதாவது ஒரு உருவம் (தேகம்) இருந்தால், அது நான் அல்ல, அது என்னுடையதல்ல, அது என்னுயிர் அல்ல என்று நன்றாகவும் சரியாகவும் அறிவினால் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இவ்வாறே வேதனை, ஸஞ்ஞா, சம்ஸ்காரம், விஞ்ஞானம் என்கிற நான்கைப் பற்றியும் நன்றாகவும் சரியாகவும் அறிவினால் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

பிக்குகளே! இப்படி ஆராய்ந்து பார்க்கிற அறிவு பெற்றவர்கள் ரூபத்தைப் பற்றியும் வேதனையைப் பற்றியும் சமஸ்காரத்தைப் பற்றியும் விஞ்ஞானத்தைப் பற்றியும் இவ்வாறு ஆராய்ந்து பார்த்து உண்மையைக் காண்பார்கள். உண்மை கண்டவர்கள் ஆசையை விட்டுவிடுவார்கள். ஆசையை அறுப்பதினாலே, கிலேசங்களில் (துன்பங்களில்) இருந்து நீங்கியமனத்தைப் பெறுவார்கள். அவ்வாறு மனமாசு நீங்கியவர்கள் அனாத்மவாத அறிவைப்பெற்று, "செய்ய வேண்டிய நன்மைகளையெல்லாம் செய்து முடித்தேன். இனி எனக்கு மறுபிறப்புக் கிடையாது. இந்த அர்ஹந்தாவைப் பற்றிச்செய்ய வேண்டியது வேறொன்றுமில்லை" என்று ஞானக்கண்ணாலே அறிந்து கொள்வார்கள்.

பகவன் புத்தருடைய இந்தப் போதனையைக் கேட்டபோது ஐந்து பிக்குகளும் எல்லாவித கிலேசங்களையும் வென்று அர்ஹந்தபலனை அடைந்தார்கள்.