பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 / புத்தரின் வரலாறு

இதனைக் கேட்ட யசகுல குமாரனுடைய மனம் விளக்கமடைந்தது. அப்போது பகவன் புத்தர், துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்னும் நான்கு உண்மைகளை விளக்கமாகப் போதித்தார். தூய்மையான வெள்ளைத் துணியில் சாயம் நன்றாகப் பற்றுவதுபோல, யசகுலபுத்திரன் மனத்தில் நான்கு உண்மைகளும் மிக நன்றாகப்பதிந்தன. அதனால் அவன் சுரோத்தா பத்தி பலன் அடைந்தான்.

முதல் உபாசகர்

யசகுல புத்திரனுடைய தாயார், மாளிகையிலே புத்திரனைக் காணாமல், தன் பதியாகிய தனபதிக்கு அறிவித்தாள். தனபதியும் மகனைத் தேடுவதற்காக நான்கு திசைகளிலும் குதிரைச் சேவகரை அனுப்பித் தானும் அவனைத் தேடப் புறப்பட்டான். தனபதி, தன் மகனுடைய பொற்பாதரக்ஷையின் அடிச்சுவடுகளைக் கண்டு அதன் வழியே தொடர்ந்து சென்றான். அந்த அடிச்சுவடு இளிபதன ஆராமத்தில் சென்றுவிட்டது. பகவன் புத்தர், தனபதி தன் மகனைத் தேடிக் கொண்டுவருவதைத் தூரத்திலேயே கண்டு, தமது இருத்தியினாலே தனபதி தன் மகனைக் காணாதபடி மறைத்து விட்டார்.

தனபதியும் ஆராமத்தையடைந்து பகவன் புத்தரிடம் போய் வணங்கி, "சுவாமிகளே! சற்று முன்பு இந்தப் பக்கம் வந்த யசபுத்திரனைப் பகவர் கண்டதுண்டா?" என்று கேட்டான்.

"யசபுத்திரனைக் காண்பதற்கு விருப்பமாக இருந்தால், தனபதியே! இங்குச் சற்று அமர்க. சற்று நேரத்திலே யசபுத்திரனைப் பார்க்கலாம்" என்று அருளிச் செய்தார் பகவர்.

கிருகபதி, தன் மகன் இங்கு இருப்பதை அறிந்து கவலை நீங்கி மகிழ்ச்சி கொண்டார். அப்போது பகவன் புத்தர் செல்வத்தின் பயன் முதலியவைகளைப் பற்றித் தனபதிக்கு உபதேசம் செய்தார்.

உபதேசத்தின் கடைசியிலே தனபதி ஸ்ரோதாபத்தி பலன் அடைந்தார். பிறகு, தளபதி புத்த தன்ம சங்கம் என்றும் மும்மணியைச் சரணம் அடைந்து பௌத்தரானார். உலகத்திலே மும்மணிகளைச் சரணம் அடைந்த முதல் உபாசகன், யசகுல புத்திரனுடைய தந்தையான காசி நகரத்துத் தனபதியே ஆவார்.

தன் தந்தைக்குப் பகவர் போதித்த தர்மோபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்த யசகுலபுத்திரன் ஞானம் பெற்று எல்லாக்