பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 89

தர்மப் பிரசாரம்

கார்காலம் கழிந்து ஒரு திங்கள் வரையில் பகவன் புத்தர் காசியிலேயே இருந்தார். பிறகு அவர், தமது அறுபது பிக்குகளையும் அழைத்து, "பிக்குகளே! தேவர்களையும் மனிதர்களையும் பிணிக்கிற பாசங்களையெல்லாம் நான் நீக்கியிருக்கிறேன். என்னைப்போலவே நீங்களும் அந்தப் பாசங்களையெல்லாம் நீக்கியிருக்கிறீர்கள். உலகத்திலேயுள்ள மக்களின் நன்மைக்காக நீங்கள் யாவரும் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று தர்மத்தைப் போதியுங்கள். ஒரே இடத்திற்கு இருவர் போகாதீர்கள்! ஒவ்வொருவரும் வெவ்வேறு இடத்திற்குச்செல்லுங்கள். சென்று தொடக்கத்திலும் இடையிலும் கடைசியிலும் நன்மைகளைப் பயக்கிற பரிசுத்தமான பௌத்த தர்மத்தைப் போதியுங்கள். பிரமசரியத்தைப் பிரகாசிக்கச் செய்யுங்கள். தருமத்தை உணர்கிற நல்லறிவு படைத்த மக்கள் உலகத்திலேயிருக்கிறார்கள். தருமத்தைப் போதிக்கப் புறப்படுங்கள். தானும் உருவேல ஜனபதத்தில் சேனானி கிராமத்தில் தர்மம் போதிக்கப் போகிறேன்" என்று அருளிச் செய்தார்.

இவ்வாறு அருளிச் செய்து, தர்ம தூதர்களான அறுபது பிக்குகளையும் அறுபது இடங்களுக்கு அனுப்பித் தாமும் உருவேல ஜனபதத்திற்குப் புறப்பட்டார்.

பத்ர வர்க்கிகர்

காசியிலிருந்து உருவேல கிராமத்துக்குச் செல்லும் சாலை வழியாகப் பகவன் புத்தர் நடந்து சென்று இடைவழியிலே ஒரு பக்கத்திலே உள்ள பருத்தித் தோட்டத்தருகில் ஒரு மரத்தின் அடியில் தங்கினார். அவ்வமயம், பத்ரவர்க்கிய குமாரர்கள் முப்பதுபேர் தமது மனைவியரோடு வினோதத்திற்காக நடந்து வந்தார்கள். அவர்களில் மனைவியில்லாத ஒருவர், கணிகை ஒருத்தியை அழைத்துக்கொண்டு அவளுடன் வந்தார். இவர்கள் வினோதமாக இருக்கும் சமயம் பார்த்து அந்தக் கணிகை, நகைகைளயும் விலையுயர்ந்த பொருள்களையும் எடுத்துக்கொண்டு போய் விட்டாள். சிறிது நேரங்கழித்து இதனை அவர்கள் அறிந்தார்கள்; அவளைத் தேடிப் புறப்பட்டார்கள்.

அப்படித் தேடி வருகிறவர்கள், குளிர்ந்த மரத்தின் அடியிலே தங்கியிருக்கிற பகவரைக் கண்டு வணங்கி "சுவாமி! இவ்வழியாகச் சென்ற ஒருத்தியைக் கண்டீர்களா?" என்று கேட்டார்கள்.

"குழந்தைகளே! ஒருத்தியைத் தேடுகிறதினாலே உங்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?" என்று கேட்டார் பகவர்.