பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 / புத்தரின் வரலாறு

அர்கந்த பதம் அடைந்தார். அவருடன் வந்தவர்களும் அர்கந்தபதம் அடைந்தார்கள். பிறகு, இவர்கள் எல்லோரும் சந்நியாசம் பெற்றுத் துறவு பூண்டார்கள். அரஹந்தரான பிறகு இவரை அழைத்துக் கொண்டு போகவந்த காரியத்தை மறந்து விட்டார்கள்.

சுத்தோதன அரசர் மீண்டும் ஒரு அமைச்சரை ஆயிரம் பரிவாரங்களுடன் அனுப்பினார். அவரும் முன்னவரைப் போலவே உபதேசம் கேட்டுச் சந்நியாசம் பெற்று வந்த காரியத்தை மறந்துவிட்டார்கள். இவ்வாறு ஒன்பது பேரை அனுப்ப ஒன்பதின்மரும் அர்கந்த பலன் பெற்றுத் துறவியாய் விட்டார்கள்.

பிறகு சுத்தோதன அரசர் யோசித்துக் கடைசியாக உதாயி என்பவரை அனுப்பத் தீர்மானித்தார். இந்த உதாயி என்பவர் சித்தார்த்தகுமாரன் பிறந்த அதே நாளில் பிறந்தவர். சித்தார்த்த குமாரனின் இளமை வயதில் அவருடன் நண்பராக இருந்து விளையாடியவர்.

"அப்பா உதாயி! என் குமாரனை அழைத்துவரும்படி என் அமைச்சர் பத்துப் பேரையும் பத்தாயிரம் பரிவாரங்களுடன் அனுப்பினேன். போனவர்கள் திரும்பி வரவில்லை. ஒருசெய்தியும் தெரியவில்லை. எனக்கோ வயதாய்விட்டது. எப்போது மரணம் நேரிடுமோ தெரியாது. ஆகையினாலே தீ போய் என் புத்திரனை அழைத்துக்கொண்டு வா" என்று சுத்தோதன அரசர் கூறினார்.

"அரசே! நான் சந்நியாசம் பெற எனக்கு உத்தரவு கொடுப்பீரானால், நான் போய் அவரை அழைத்துவருகிறேன்" என்றான் உதாயி.

"உன் விருப்பம்போலச் செய்யலாம். ஆனால், என் மகனை என்னிடம் அழைத்துக்கொண்டு வரவேண்டும்" என்றார் அரசர்.

உதாயி பரிவாரங்களுடன் புறப்பட்டு வெளுவனம் சென்று பகவன் புத்தரிடம் உபதேசம் கேட்டு அர்கந்த பலம் அடைந்து ஏக பிக்குவிதமாகச் சந்நியாசம் எடுத்து உப சம்பதாவையும் பெற்றார். எட்டு நாட்கள் சென்ற பிறகு உதாயிதேரர், புத்தரைக் கபிலவத்து நகரம் அழைத்துப்போக எண்ணினார். அப்போது வேனிற்காலம், உதாயிதேரர், பகவன் புத்தரிடம் சென்று வணங்கி இவ்வாறு கூறினார். "பகவரே! இப்போது மரங்கள் அழகான பூக்களைப் பூக்கின்றன. பூக்கள் அழகாக இருக்கின்றன. மலர்ந்த பூக்களிலிருந்து எல்லாப் பக்கங்களிலும் நறுமணம் வீசுகிறது. பழுத்த இலைகள் விழுந்து புதிய தளிர்கள் துளிர்க்கின்றன. ரோகிணி நதியைக் கடந்து கபிலவத்துக்குப் புறப்பட்டுப் போகும் காலம் வந்தது. பகவரே! புறப்படுங்கள். ஜனங்களின் நன்மைக்காக அங்கே போகப்புறப்படுங்கள்.