பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

405


இவர் எடுத்துரைக்கின்றனர். அவரோ வாரார்; முல்லையும் பூத்தன (குறு221) எனத் தொடங்கும் கார்ப்பருவத்தின் வரவைக் கண்டு வருந்தும் தலைவியின் மனநிலையை நயமாக எடுத்துக் காட்டுகின்றனர். ஊன்பொதி பசுங்குடையார் 10, 203, 376, 378

இவர் பெயர்க் காரணம் தெரிந்திலது. ஊன் பொதிந்த பசுங்குடையினை இலக்கியச் சுவையோடு பாடியது பற்றி இப் பெயரினைப் பெற்றவராகலாம். சேரமான் பாமுளுர் எறிந்த இளஞ்சேட் சென்னி, சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி, சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி ஆகியோரைப் பாடியவர் இவர். இளஞ்சேட் சென்னி என்னும் பொதுப் பெயரையும், அதன் முன் பொருந்திய அடைமொழி களையும் நோக்கினால், இவை ஒருவனைக் குறித்ததெனக் கருதவும் படும். வள்ளல் ஒருவன் வழங்கிய அணிகளைத் தம் குடும்பத்தார் அணிந்து களித்த நிகழ்ச்சியை இவர் சுவையாக வருணிக்கின்றார். இராவணனால் கொண்டு போகப்பட்ட சீதை தன் நகைகளைக் கழற்றித்துகிலிற் கட்டிக் கீழே போட, அதனை எடுத்த வானரங்கள் அவற்றை முறைமாறி அணிந்து கொண்டதைப் போன்று இருந்ததாம் (புறம்378) அவர்கள் அணிந்து கொண்ட காட்சி.

எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார் 356, 397

அகநானூற்றுள் ஏழு செய்யுட்களும், குறுந்தொகையின் 391, நற்றிணையின் 219 ஆம் செய்யுட்களும் இவர் பாடியனவாக விளங்கும். எருக்காட்டுர், தஞ்சை மாவட்டத்து ஒர் ஊர் என்பர். இவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியவர். அவனால் இவருக்குத் தாயமாக எருக்காட்டுர் அளிக்கப்பட்ட தென்று கொள்ளலாம். கண்ணனார் இவரது இயற்பெயர். அகநானூற்றுச் செய்யுளில் (105) பல்வேல் எழினி என்பானையும், முசிறியை முற்றிக் கைக்கொண்டோனாகிய செழியன் ஒருவனையும் (அகம்.149) இவர் பாடியுள்ளனர். 'ஒடியா விழவின் நெடியோன் குன்றத்தைப் பற்றியும் (அகம் 149), வானவனின் கொல்லிக் குடவரையைப் பற்றியும், வால்நிணப் புகவின் வடுகர் தேஎத்தைப் பற்றியும் (அகம்.213), உறந்தையின் வளமையைப் பற்றியும் (அகம்.237) இவர் பாடியுள்ளனர். காடு வாழ்த்தாகப் பாடியுள்ள செய்யுள் (356) நிலையாமையை மிகவும் அழகாக எடுத்துக் காட்டுவதாகும். 'அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து போற்றுவது, அக் காலத்தினும் சோணாட்டில் இக் குடியினர் மிகுதியாக இருந்தமையைக் காட்டுவதாகும் (புறம்,397). இவர், தம் குடிமரபு பேணுவாராக விளங்கிய சால்பும் அறியப்படும்.