பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

புறநானூற்றுச் சிறு கதைகள்


எட்சாந்து = எள்ளுத் துவையல், வல்சி = உணவு, பரற்பெய் கரடுமுரடான தரையில், உயவற் பெண்டிர் = கைம் பெண்கள், ஈமம் சிதை, ஒரற்றே = ஒரே தன்மையை உடையனவே.


24. பாண்டியன் வஞ்சினம்

நெடுஞ்செழியன் மிக இளமையிலேயே பட்டத்துக்கு வந்துவிட்டான்.அவ்வாறு பட்டத்துக்கு வந்த சில நாட்களிலேயே மிகப்பெரிய சோதனை ஒன்று அவனது அரசாட்சியை நோக்கி எழுந்தது. மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசனும் அவனைச் சேர்ந்தவர்களாகிய திதியன், எழினி முதலிய சிற்றரசர்களும் ஒன்று சேர்ந்து படை திரட்டிக் கொண்டு பாண்டிய நாட்டைக் கைப்பற்றுவதற்குப் புறப்பட்டு வந்துவிட்டனர்.

அப்போதுதான் நெடுஞ்செழியன் பாண்டிய நாட்டு அரியணையில் ஏறி, முடி சூடிக் கொண்டிருந்தான். பருவத்தால் இளைஞனாகிய அவன் இவ்வளவு விரைவிலேயே பெரிய படையெடுப்பு ஒன்றை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் துணிவோடு எதிர்த்துப் போரிடுவது என்றே முடிவு செய்தான். அமைச்சர்களும் ஐம்பெருங்குழுவினரும் படைத் தலைவர்களும் போரை எப்படிச் சமாளிப்பது என்று விளங்காமல் மலைத்தனர்.

“மலைப்பதோ, திகைப்பதோ அறிவீனமாகும் தயங்காமல் எப்படியும் உடனே போருக்குப் புறப்பட்டேயாக வேண்டும்” என்று துணிவோடு முழங்கினான் செழியன். அமைச்சர்களும் பிறரும் இன்னும் தயங்கினார்கள். கரணத்தியலவர், கருமகாரிகள், கனகச் சுற்றத்தினர் முதலிய ஆலோசனை கூற வேண்டியவர்கள் யாவரும் அரசன் கட்டளைக்கு மறுமொழி கூறாமல் பேச்சு மூச்சற்று வீற்றிருந்தனர்.

உடனே நெடுஞ்செழியனுக்குக் கோபம் வந்துவிட்டது.