பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
118
புறநானூற்றுச் சிறு கதைகள்
 


பெருஞ்சித்திரனார் வெளிமானைத் தேடிப் போன நேரத்தில் அவன் களைப்பு மிகுதியால் உறங்குவதற்காகப் பள்ளியறைக்குச் சென்றிருந்தான். புலவர் ஒரு காவலனிடம் தான் உதவி கோரி வந்திருந்தலை வெளிமானுக்குக் கூறியனுப்பினார்.

புலவர் வரவைக் காவலன் பள்ளியறையிலே போய்க் கூறியபோது இளவெளிமானும் அருகில் இருந்தான். வெளி மானுக்குத் தூக்கம் கண்களைச் சொருகியது. எனவே, அவன் புலவரை வரவேற்றுப் பரிசில் கொடுக்க முடியாத சோர்வில் ஆழ்ந்திருந்தான். புலவரைப் போகச் சொல்லி விட்டு மற்றோர் சமயம் வரச்சொல்லி அனுப்பினாலோ, அவர் தவறாக எண்ணிக் கொள்வார் என்று சிந்தித்த வெளிமான் அருகில் இருந்த தன் தம்பியாகிய இளவெளிமானை நோக்கி, “தம்பி! எனக்காக நீ ஒரு காரியம் செய்யேன். நான் எழுந்திருந்து நடக்க முடியாதபடி களைத்துப் போயிருக்கின்றேன். கண்களில் உறக்கம் சுமையாக அழுத்துகின்றது. புலவர் பெருஞ்சித்திரனார் என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கின்றார். நீ அவரை நான் வரவேற்க இயலாத, நிலையில் இருப்பதற்காக வருந்துவதாகக் கூறி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வேண்டிய உதவிகளை அவருக்குச் செய்து கொடு அவர் என்னை அவசியம் சந்திக்க வேண்டும் என்று கூறினால் இன்று முழுவதும் இங்கே தங்குவதற்கு வசதிசெய்து கொடு. நான் உறங்கி விழித்ததும் அவரைச் சந்திக்கிறேன்” என்று கூறினான். அவன் குரலில் குழைவும் கனிவும் இணைந்திருந்தன. ஆனால், அண்ணனின் இந்த வேண்டுகோளுக்கு இளவெளிமான் பதிலே பேசவில்லை. அலட்சியம்ாக மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு நின்றான் அவன்.

“என்ன தம்பி? பேசாமல் பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்கிறாயே? நான் சொல்வது உன்காதில் விழுகிறதா இல்லையா?” - வெளிமான் சற்றே இரைந்த குரலில் கேட்டான்.

“விழுகிறது அண்ணா இந்தப் புலவர்களே இப்படித்தான்! நேரம், காலம் தெரிந்து வரமாட்டார்கள்.இவர்கள் தொல்லையே பெரிய தொல்லையாகப் போய்விட்டது...! அது சரி, இப்போது இதற்காக நான் போக வேண்டுமா? இந்தக் காவலனே சென்று