பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
162
புறநானூற்றுச் சிறு கதைகள்
 


காப்பாற்றிவிட்டான். புலவருடைய கையைப் பிடித்தபோது மல்லிகைப் பூவினால் கட்டிய ஒரு பூஞ்செண்டைப் பிடித்தது போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. கபிலருடைய கை பெண்களுக்கு அமைகிற கைகளைப்போல மிக மென்மையாக இருந்தது. அவன் ஆச்சரியம் அடைந்தான். கையை இன்னும் விடவில்லை.

“அரசே! இதோ நிதர்சனமான விளக்கம் கிடைத்துவிட்டது. நான் செய்ய இருந்தது கவிதை, நீ செய்தது வீரம். என்னைக் காப்பாற்றியதற்காக உனக்கு என் நன்றி.”

“அதிருக்கட்டும் கபிலரே! உங்கள் கை ஏன் இவ்வளவு மென்மையாக இருக்கிறது, பெண்களுடைய கை போல”

“நீகேட்பதைப் பார்த்தால் என் கையைவிட உன் கை வலிமையாகவும் கரடுமுரடாகவும் இருக்கிறது என்ற பொருளும் அதில் தொனிக்கிறதே?”

“ஆம் உண்மைதான். இதோ என் கைகளைப் பாருங்கள். சொற சொற வென்று கரடுமுரடாகத்தான் இருக்கிறது.”

“நல்லது கடுங்கோ! நான் தடுக்கி விழுந்தாலும் விழுந்தேன். உனக்கு ஒர் உயர்ந்த உண்மையை விளக்க அது காரணமாக அமைந்துவிட்டது. என்போன்ற கலைஞர்கள் அறிவினாலும் சிந்தனையினாலும் மட்டுமே உழைக்கிறோம். கைகளால் உழைப்பதில்லை.எனவே எங்கள் கலையைப்போலவே கைகளும், உடலும் மென்மையாக இருக்கின்றன.ஆனால் நீயும் உன் போன்ற வீரர்களுமோ கைகளால் உழைக்கிறீர்கள். உழைத்து உழைத்து வன்மையை அடைகின்றன. உங்கள் கைகள்.”

“இந்த உலகுக்கு அறிவால் உழைப்பவர்கள் முக்கியமா? உடலால் உழைப்பவர்கள் முக்கியமா?”

“இருவருமே முக்கியந்தான் அரசே! நீதியும் உண்மையும் அழகும் மென்மையும் அழிந்துவிடாது காக்க அறிவு வேண்டும். அறிவைக் காப்பாற்றவும் அறிவுக்குத்துணை செய்யவும் உழைப்பு வேண்டும்”