பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

83


இருக்க முடியும்?” ஆலத்ததூர் கிழார் பேசி முடித்துவிட்டுக் கிள்ளிவளவனின் முகத்தைப் பார்த்தார்.

அவன் முகத்தில் சிந்தனைக் குறிகள் தென்பட்டன. வளவன் ஒரு காவல்காரனைக் கூப்பிட்டுப் படைத்தலைவனை அழைத்து வருமாறு பணித்தான். படைத்தலைவன் வந்து வணங்கி நின்றான்.

“நம் படைகளும் நாமும் இன்றே தலைநகர் திரும்ப வேண்டும்! இந்தப் போர் தேவையில்லை நமக்கு. உடனே நகர் திரும்ப ஏற்பாடு செய்” ஆணை பிறந்தது அரசனிடமிருந்து.

ஆலத்ததூர் கிழார் மனமகிழ்ந்து அவனைப் பாராட்டினார். கிள்ளி அவருக்கு நன்றி செலுத்தினான்.

அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீஅளந் தறிதிநின் புரைமை வார்கோல்
செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் இழங்கிற் றெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்
கருங்கைக் கொல்லன் அரஞ்செ யவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரம் தடியும் ஒசை தன்னூர்
நெடுமதில் வரைப்பில் கடிமனை இயம்ப
ஆங்கினி திருந்த வேந்தனோ டிங்குநின்
சிலைத்தார் முரசங் கறங்க
மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே (புறநானூறு-36)


18. புலியும் எலியும்

“உங்களுக்குப் புலியைப் போன்ற நண்பர்கள் வேண்டுமா? எலியைப் போன்ற நண்பர்கள் வேண்டுமா?” என்று நம்மை நோக்கி ஒரு கேள்வி கேட்கிறான் பழைய காலத்துச் சோழ அரசன் நல்லுருத்திரன்.