பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

முகவுரை

மாலியவான்

மகோதரன்

சூர்ப்பணகை

மண்டோதரி

முதலாயினோர் பின்னொரு நிலையிலும் இந் நூலில் இடம் பெற்று நிற்கின்றனர்.

மேற்குறித்தவர்கள் யாவரும் ‘இராமாயணம்’ என்னும் காவிய அரங்கில் நடிக்கும் நாடகப் பாத்திரங்களாவர்.

இந்தக் கதா பாத்திரங்களைத் துணையாகக் கொண்டு, இராம சரிதத்தை இணைபிரியாது இனிது மருவிக் கம்பர் தமது காவிய உலகத்தை அறிவொளி பரந்து மிளிர, அழகு சுரந்து திகழ, அதிசய மிகுந்து பெருக, ஆனந்தமயமாகப் படைத்திருக்கின்றார்.

இவரது படைப்புத் திறனும், கற்பனை நிலைகளும், கருத்தமைதிகளும், கவிவிளைவுகளும், உலக மகாகவிகள் எவரிடமும் காணமுடியாத அற்புத ஆற்றல்களும், இடங்கள்தோறும் உரிமையானவர்களை இனிது காட்டி இவர் இயக்கிவரும் காட்சியும், இடை இடையே அரிய உண்மைகளை எளிமையாக இசைத்து நிற்கும் மாட்சியும், மனோதத்துவங்களும், பாத்திரங்களின் பான்மை மேன்மைகள் யாவும் உள்ளும் புறமும் ஒருங்கே தெரியத்தெள்ளிதின் விளக்கும் திறமையும், அவர்கள் வாயிலாக உள்ளுறைந்து உலகிற்கு இவர் உணர்த்தியிருக்கும் உணர்வொழுக்கங்களும், உவமை நிலைகளும், உறுதிநலங்களும், பிறவும் அறிவு நலம் சுரந்து யாண்டும் இனிய சுவைகள் நிறைந்துள்ளன. சொன்னலங் கனிந்து பொருள் நலம் பொலிந்து எந்நலங்களும் மலிந்து எழில்மிகுந்துள்ள அந்நன்னயங்களை யெல்லாம் ஒருங்கே விளக்கி அருங்கலை விநோதமாய் இந்நூல் விளைந்து வருதலால் கம்பன் கலை நிலை என வந்தது.

இதனால் இந்நூலின் அழகும் அமைதியும் அருமையும் பெருமையும் இனிது புலனாம். அறிவு நிலையமான இத்தகைய அரிய பெரிய துறையில் யான் துணிந்து புகுந்ததற்குக் காரணம், இராமாயணத்தில் இளமை தொடங்கியே இயல்பாக எனக்குள்ள பேராவலும், அக்காவிய நிலையைக் குறித்து அமயம் வாய்த்தபோது உபந்-