உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25. அழகு ஆராய்ச்சி

காலை மணி சுமார் பத்து இருக்கும். ஹரி குளித்து சாப்பாட்டை முடித்து, ஏதோ ஒரு பல்லவியைத் தன் மனத்துக்குள் பாடி விரலைக் கூட்டிக் கழித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் தங்கியிருந்த தஞ்சை ராஜா சத்திரத்து வாசலில் அழகிய நீல நிறக் கார் ஒன்று வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய காந்தாமணியின் தாயார், ஹரியின் அறை நம்பரை நன்றாக உற்றுப் பார்த்து விட்டு, சாத்தியிருந்த கதவை லேசாக விரல்களினால் தட்டினாள்.

ஹரி கதவை நன்றாகத் திறந்து, காந்தாமணியின் தாயாரை அன்புடன் வரவேற்று, அருகிலிருந்த நாற்காலியில் உட்காரும்படி கேட்டுக் கொண்டான்.

உடனே காந்தாமணியின் தாயார், “என்னை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நான் காந்தாமணியின் அம்மா. சுவாமி மலைக்கு ஒரு தடவை நானும், என் பெண்ணுமாக வந்திருந்தோம். ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டாள்.

“நன்றாகச் சொன்னீர்கள், நான் உங்களை மறக்கவே இல்லையே- நேற்றுக் கூடத் தெப்பத்தில் உங்களையும், காந்தாமணியையும் பார்த்தேனே!”

“ஆமாம், ஆமாம் உங்களுடைய கச்சேரியைக் கேட்பதற்கென்றே நாங்கள் வந்திருந்தோம். பிரமாதமாகப் பாடினீர்களே! இரவு முழுவதும் பாப்பா