பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 - பூர்ணசந்திரோதயம்-2 மணலாக இருந்த ஒரு வாரியில் உட்கார்ந்து கொண்டேன். பசி, தாகம், களைப்பு, மயக்கம் முதலியவை மிதமிஞ்சி என்னைக் கப்பிக் கொண்டன. ஆகையால், கொஞ்ச நேரத்தில் என் உணர்வே தவறிப்போய்விட்டது. அதன்பிறகு என்ன நடந்தது என்பதே எனக்குத் தெரியாது. நான் உட்கார்ந்திருந்தேனோ படுத்திருந்தேனோ என்பதுகூட எனக்குத் தெரியாது. மறுநாட்காலையில் சூரியன் வெகுதூரம் உயர்ந்து என் உடம்பில் கடுமையாக உறைத்த பிறகே நான் எழுந்தேன். என் கண்களெல்லாம் குழிந்துபோக உயிரில் முக்கால் பாகமும் போய்விட்டதாகத் தோன்றியது. எழுந்து நடக்கலாம் என்றால், உடம்பு கட்டுக்கடங்காமல் அப்படியே பச்சைப் புண்ணாகக் கிடந்தது. அன்றோடு நான் இறந்து போவது நிச்சயமென்ற எண்ணம் என் மனசில் உண்டாகத் தொடங்கியது. நான் தனியாக எங்கேயாவது போய் இனி கஷ்ட ஜீவனம் செய்வதை விட அப்படியே இறந்துபோவதும் நல்லதாகத் தோன்றியது. நான் அவ்வளவு பரிதாபகரமான நிலைமையில் இருந்த போதிலும், என் தாயாரைவிட்டு நான் ஓடி வந்ததைப் பற்றி என்மனசில் கொஞ்சமாவது விசனமே உண்டாகவில்லை. ஆனாலும், என் மனசில் ஒரே ஒரு குறை மாத்திரம் இருந்து வந்தது. நான் மாத்திரம் தஞ்சாவூருக்குப் போய்ச் சேர்ந்தால், யாரிடத்திலாவது இந்த ரகசியத்தை வெளியிட்டு, அவர்களுடைய உதவியைக் கொண்டு பூனாவிலுள்ள லலிதாகுமாரி தேவியை ஒருவாறு எச்சரிக்கும்படி செய்யலாம் என்ற ஒரு யோசனை தோன்றிக் கொண்டிருந்தது. இந்த ரகசியத்தை அறிந்தவர் என்னைத் தவிர வேறே அயலார் யாருமில்லை. ஆகையால், என் சகோதரிகள் தங்களுடைய கருத்தை எவ்வித இடையூறும் இல்லாமல் நிறைவேற்றி விடப் போகிறார்களே என்ற வேதனையும் ஒரு பக்கத்தில் என்னை வதைத்தது. ஆகையால், நான் கடைசி முயற்சியாக முயன்று மெதுவாக எழுந்து இன்னம் கொஞ்சதூரம் போய்ப் பார்க்க வேண்டும் என்ற நினைவினால் தூண்டப்பட்டு