பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சேரி விளையாட்டு

மாலைப் பொழுதிலே தனியாக உலாவப் போவதில் எனக்கு எப்பொழுதுமே அடங்காத ஆவல். அந்த நேரத்திற்கும் தனிமைக்கும் உள்ளத்தைத் தட்டி எழுப்பிக் கற்பனை உலகிலே இடைஞ்சலின்றி எங்கும் திரியும்படி செய்யும் ஆற்றல் மிகுந்திருக்கிறது. அப்படிக் கற்பனை உலகில் உள்ளத்தைச் செல்லவிட்டுக் கால் சென்ற திசையிலே போய்க்கொண்டிருந்த ஓர் அந்தி வேளையிலே எதிர்பாராமல் நான் ஒரு பறைச்சேரியை அணுகினேன். அங்கே கண்ட காட்சி என் உள்ளத்தைக் கவர்ந்தது. அதுவே சேரி விளையாட்டு என்ற கவிதைக்கும் காரணமாயிற்து.

அன்று, வானவெளியிலே அழகின் பெருக்கம் ஒன்றையும் காண முடியவில்லை. உலகத்திலும் ஏதோ ஒருவகையான வறட்சிதான் மிகுந்திருந்தது. மேற்கு மலையில் சாய்ந்து கொண்டிருந்த கதிரவனும் உற்சாகத்தைத் தரவில்லை. முன்னாலிருந்த சேரியும் அப்படித்தான்.

நான் அசையாமல் நின்று என் முன்பு தோன்றிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கறையான் அரித்து வெயிலையும் மழையையும் தடுக்க வலியிழந்த பனை ஒலை வேய்ந்த கூரைகள்: உப்புப் பொரிந்து விழுந்து கொண்டிருக்கும் மண் சுவர்கள் வறட்சியும் வறுமையும் தாண்டவமாடும் குடிசைகள். அங்கே ஒரு சுவரருகிலே ஒரு சிறுவனும் சிறுமியும் மணலால் சிற்றில் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.