பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

தைப் பொங்கல்


 பொங்கலோ பொங்கல்! தை பிறந்து விட்டது. முதல் நாள் பெரும் பொங்கல். இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல். மூன்றாம் நாள் பூப் பொங்கல், பொங்கலோ பொங்கல்!

தைத்திங்கள் முதல் நாள். எங்களூரில் இன்று ஒரே கலகலப்பு. எங்கே பார்த்தாலும் மகிழ்ச்சி பொங்குகிறது. அதிகாலையிலேயே காப்புக் கட்டு முடிந்துவிட்டது. பொன் மஞ்சள் நிறமான ஆவாரம் பூவும். வெண்ணிற மான பூளைப் பூவும், கரும் பச்சை நிறமான வேப்பந் தழையும் காப்புக் கட்டாக விளங்கி, பனி தொலைந்து பூவும் புது மணமும் தோன்றப் போகிறது என்பதற்கு அறிகுறியாக எங்கு பார்த்தாலும் விளங்குகின்றன.

மக்களிடையே ஒரு பரபரப்பு;குதூகலம். சிலர் புதிய பட்டி செய்கிறார்கள். சிலர் பழைய பட்டியைப் புதுப்பிக்கிறார்கள். வண்டி வண்டியாக மூங்கில் வந்து கொண்டே இருக்கிறது. இருபது மைல் முப்பது மைல் போயெல்லாம் நல்ல நல்ல மூங்கில் வாங்கி வந்திருக்கிறார்கள்.

ஊருக்கு அருகில் இருந்த பட்டிகளெல்லாம் தொலைவிலுள்ள நிலங்களுக்குச் செல்கின்றன. ஊரடியிலேயே மாட்டுப் பொங்கலென்றால் அத்தனை நன்றாக இராதாம்.

சிறுவர்கள் மாடுகளின் கொம்புகளுக்குச் சாயங் கட்டுவதில் ஒருவருக் கொருவர் போட்டி போட்டுக் கொள்ளுகிறார்கள்.