பக்கம்:பெண்விலைக் கண்டனச் செய்யுட்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கடல்வணங்குங் கழற்காலான் கற்பகநாட்
       டிறையோடு ககன மேவித்
திடமொடுசிங் காசனத்திற் சீர்பெறவீற்
       றிருந்தாரம் பூண்ட செம்மல்
அடல்வழுதி தனக்குமணி முடிபுனையும்
       அருங்குலத்தில் அவத ரித்தும்
மடவரலை விற்றுலகில் மதியின்றி
       உயிர்வாழ்தல் மாண்போ? சொல்லீர். (அ)

மண்ணாளு மன்னர்புகழ் வயவீரர்
       குலத்துதித்து மதியி லாமற்
கண்ணான பெண்மகவைக் கைப்பொருளுக்
       கீவீர்காள்! கடவுள், சற்றும்
உண்ணாணம் அறிவொழுக்கம் உயர்ச்சியொடு
       மானமிலா உங்கள் தம்மைப்
புண்ணான தீநரகிற் புகுவிப்பார்,
       இதுசரதம் பொய்ம்மை யன்றே. (௯)
 
அன்னம்மிடுஞ் சத்திரங்கள் ஆலயங்கட்
       டல்தம்மை அடைந்தோர் யார்க்கும்
கன்னியரை மணமுடித்தல் கல்விச்சா
       லைகணாட்டல் கற்றோர் போற்றும்
என்னதரு மங்களுள அவையாவும்
       புரிவணிகர் இருங்கு லத்தில்
முன்னரிய மங்கையைவிற் றுயிர்வாழும்
       முறையென்னே? மொழிகு வீரே. (௧௦)