உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரட்சி ஏட்டில் சமதர்ம முழக்கம்

89

‘எல்லா உற்பத்திச் சாதனங்களையும், ஏகோபித்த கூட்டுறவு முறையில் சொந்தமாக்குவதோடு மாத்திரம், சோசலிசம் நின்று விடுவதில்லை.’

உற்பத்திப் பொருள்களைச் சரிசமதையாக வினியோகப் படுத்துவதில், அதிகம் முனைந்து நிற்கிறது. இதைச் சுட்டிக் காட்டிய கட்டுரை, இந்தியாவின் தனித்தன்மையை நினைவில் கொண்டு சரியான வழி காட்டியது. அதைப் பார்ப்போம்.

‘தொழிலாளர்களை ஒன்று படுத்துவதற்கு முன்பு—அதுவும், அவர்களுடைய அடிமைத் தன்மை—அறியாமை—அந்தகாரம்—மூடக் கொள்கைகள் முதலிய யாவும் மற்றும் ஆட்சியாளர் நலனுக்காகக் கங்கணம் கட்டிக் கொண்டு வீறிட்டு நிற்கும் சமஸ்தானாதிபதிகள்—பிரபுக்கள்—நிலச்சுவான்தாரர்கள் முதலிய முதலாளித்துவ ஆக்கங்கள் யாவும் இவை போன்ற பிற நூற்றுக் கணக்கான சக்திகளோடு, எதிரிட்டுப் போராட வேண்டுமென்று அறிவுறுத்தியது.’

நூற்றுக் கணக்கான ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட என்ன தேவை என்பதையும், ‘புரட்சி’ இதழின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.

‘தேவையான விரைவான, நடவடிக்கையானது, தொழிலாளர்களையும், தாழ்த்தப்பட்ட வகுப்பார்களையும் ஒன்றுபடுத்தி, அவர்களுக்கு ரோஷத்தைக் கிளப்பி விட்டு, சோசியலிசத்துக்குச் சரியாகக் கொண்டு செலுத்துவதேயாகும்’ என்று திசை காட்டிற்று.

உலகின் எந்த நாட்டிலும், பிறவியைக் காட்டித் தாழ்த்தப்பட்டவர்கள் கிடையாது. மற்ற தனியுடைமை நாடுகளில், ஏழை, பணக்காரன் என்ற இரு பிரிவே உண்டு. இவை நிலையான பிரிவு அல்ல; பிறவி பற்றிய பிரிவும் அல்ல; ஏழை, சட்டத்திற்குட்பட்டோ, சட்டத்திற்கு அப்பாலோ, பணக்காரனாகி விட முடியும், ஆவதைக் காண்கிறோம். சில வேளை, பணக்காரன், ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, ஏழையாலதையும் காணலாம். ஆனால், தாழ்த்தப்பட்ட வகுப்பார், ஆயுள் உள்ள வரை தாழ்த்தப்பட்டவர்களே; எவ்வளவு படித்தாலும் தாழ்த்தப்பட்டவர்களே; எவ்வளவு நுட்பத் திறன் பெற்றாலும், அந்நிலையே. எவ்வளவு குணசீலனாயினும், அத்நிலையை விட்டு மீள முடியாது.