உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

பெரியாரும்‌ சமதர்மமும்‌

இருப்பதும் ஒரு கௌரவம் என்றும், கண்ணியமானது என்றும் கருதுவது ஒரு மூட நம்பிக்கையே தவிர வேறில்லை.’ என்று பெரியார் இடித்துரைத்தார்.

தனியுடமையால் பணம் பாழாவதைச் சுட்டிக் காட்டுவதைப் பாருங்கள்.

‘மனிதனுக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரம் மோட்டார் வேண்டியிருக்கும். இதற்காக இருபது மணி நேரம் யாருக்கும் பயனின்றி இருக்கிறது. இதில் வீணாகப் பணம் முடங்கிக் கிடக்கிறது’ என்றார்.

3-6-34 நாளைய புரட்சியில் வெளியான ஒரு கட்டுரையின் சிறு பகுதியைப் படியுங்கள்.

‘இலவசமாக வீசும் பிராண வாயு, கோடீசுவரன் நுரையீரல்களில் நுழைகிறதே, அப்பரிசுத்த வாயுவே, ஏழையின் தேகத்திலும் பட்டு சுகத்தை உண்டாக்குகிறது. முதலாளித் தத்துவம், காற்றைத் தமக்கு என்று ஏராளமாகச் சேமித்து வைத்து, ஏழைக்குச் சிறிதளவே கொடுத்து உதவும்படித் திட்டம் வகுக்கக் காணோம். காற்றுக்குத் தடையில்லாத போது, மற்றவைகளுக்குத் தடைகளும், விதிகளும் இருப்பானேன்?’ இக்கேள்வி பொருத்தமானதே.