உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

x

மனிதனான எவராவது, அவரது முழு உருவையும் காட்டுவார்களென்று சமுதாயம் எதிர்பார்த்தது. அடுத்தடுத்துப் பெருக்கெடுத்து வரும் புதுப்புதுப் பொது விவகார வெள்ளத்தில், சமதர்மத் தொண்டு மூழ்கி விடுமோ என்று பலரும் அஞ்சினர்.

அந்நிலையில், பகுத்தறிவு சமதர்ம இயக்கத்தின் சார்பில், தோழர் கே. பஞ்சாட்சரம் அவர்களால் சென்னை அரும்பாக்கத்தில் இருந்து வெளியிடப்படும் “அறிவு வழி” என்னும் திங்கள் இதழில் ‘பெரியாரும் சமதர்மமும்’ என்னும் தலைப்பில் எழுதும்படி, அவர் அன்புக் கட்டளை இட்டார். காலத்தின் கட்டளையாக, ஏற்றுக் கொண்டேன். ஏறத்தாழ, நான்கு ஆண்டுகள் அப்படி எழுதினேன். இத்தோழருக்கு நம் நன்றி உரியதாகும்.

1976 சூன் திங்கள் 26ஆம் நாள் தோழர் கலச. இராமலிங்கமும், தோழியர் கோவி ராமலிங்கமும் என் தலைமையில், சீர்திருத்த முறையில் கலப்புத் திருமணம் செய்து கொண்டார்கள். அப்போது எம்.ஏ. பட்ட வகுப்புத் தேர்வு எழுதி முடித்திருந்த கோவி ராமலிங்கம், அதில் வெற்றி பெற்றதோடு, பின்னர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து, பி.எல். பட்டமும் பெறுள்ளார்; வழக்குரைஞராகத் தொழில் செய்து வருகிறார். இவர்கள் இந்நூலை வெளியிட துணிந்து முன் வந்தது, தனி மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இச்சீரிய தொண்டு நம் சிந்தனையைத் தூண்டுவதாக, வளர்ப்பதாக உள்ளது. இந்நூலை வெளியிடும் புது வாழ்வுப் பதிப்பகத்தாருக்கு, நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நெ. து. சுந்தரவடிவேலு
7-11-1987
32, கிழக்குப் பூங்கா சாலை,
செனாய் நகர்,
சென்னை - 600030.