உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. இவர்தான் பெரியார்

இமயமலை; இதன் பொருள் என்ன? பனிமலை என்று பொருள். பனிமலை ஒன்றா? இல்லை சில. இருப்பினும் இந்தியாவின் வடக்கெல்லையாக உயர்ந்து நிற்கும் மலைத் தொடரையே பனிமலை — இமயமலை என்றழைக்கிறோம்.

அதேபோல் உலகில் பெருஞ் சிந்தனையாளர்கள் சிலர்; பெருஞ் சாதனையாளர்கள் சிலர். இவர்களுள் 'பெரியார்' என்றால் பெரியார் ஈ.வெ. ராமசாமியைத்தான் குறிக்கும்.

இமயம் எதை நினைவு படுத்துகிறது? உயரத்தை—நீளத்தை—அகலத்தை. அப்புறம்? எண்ணற்ற பேராறுகளின் சுரப்பை. அதே போன்று பெரியார் என்னும் சொல் எதை நினைவுக்குக் கொண்டு வருகிறது?

நீண்ட பொதுத் தொண்டை; இணையற்ற பொதுத் தொண்டை. அது நீண்டது மட்டுமா? உயர்ந்ததும் ஆகும்.

பெரியார் தன் சாதிக்காகப் பாடுபடவில்லை. தன் மாவட்டத் திற்காகப் பாடுபடவில்லை. மக்கள் இனத் தொண்டாக அது உயர்ந்து நின்றது. அரசியல் தொண்டு, சமுதாயத் தொண்டு, பொருளியல் புரட்சித் தொண்டு என அது அகன்று விளங்கியது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக—பரந்த நிலப்பரப்பை வளப் படுத்துவது, இமயம் வழங்கும் ஆறுகள். மக்கள் இனத்தில் அநீதியை எதிர்க்க, சுரண்டலை ஒழிக்க, மக்கள் ஒருமைப்பாட்டை வளர்க்க, கவைக்குதவாத கற்பனைகளிலிருந்து விடுபட, சமத் துவத்தை — சமதர்மத்தைப் பயிரிட வைக்க உதவுவது பெரியாரின் சீரிய கருத்துகள்.

பெரியாரின் தொண்டு எங்கே—எப்படித் தொடங்கிற்று? எப்படிப் பாய்ந்தது? என்னென்ன செய்தது? ஈரோட்டில் தொடங்கியது. ஈரோடு நகராட்சித் தலைவராக முளைத்தது. மேலும் இருபத்தெட்டுக் கிளைகளாகக் கிளைத்தது. எல்லாவற்றிலும் ஈ. வெ. ராமசாமி தன்னுடைய தனி முத்திரையைப் பொறித்தார்.