உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

பெரியாரும்‌ சமதர்மமும்‌

கொண்டு, தாங்கள் படும் துன்பங்களை விரித்துரைத்தார்கள். அதைப் போக்கக் கூடிய கோரிக்கைகளை முன் வைத்தார்கள்; சிற்சில இடங்களில், வேலை நிறுத்தஞ் செய்யப் போவதாக அறிவிப்புக் கொடுத்தார்கள்.

அந்நிலையில் மெய்யான மக்கள் ஆட்சியிடம், எதை எதிர்பார்க்க வேண்டும்? நசுக்குகிறவர்களைக் கூப்பிட்டுக் கண்டித்து, நசுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகக் குறிப்பு காட்டுவார்களென்று எதிர்பார்ப்பது தவறல்ல.

அப்படி நடந்ததா? இல்லை. இந்திய முதலாளிகளின் சுரண்டலுக்கு மட்டுமா, நம் அரசுகள் அரண் ஆயின? இல்லை. அயல்நாட்டு முதலாளிகளின் சுரண்டலுக்கும், அட்டகாசத்திற்கும் காவல் தந்தன.

பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கக் கூடிய எவரையும் கைது செய்து, சிறையில் அடைக்கும் ‘ஆள் தூக்கி’ அதிகாரத்தை நிர்வாகத்திற்குக் கொடுக்கும் அவசரச் சட்டங்களைப் பிறப்பித்த மாநில அரசுகள், அவற்றைச் செயல்படுத்தின. தில்லி, பம்பாய், மதுரை போன்ற இடங்களில் தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் ஆகியவை சோதனையிடப்பட்டன. செயல் வீரர்கள் புதிய சட்டத்தின் கீழ், சிறைக்குள் தள்ளப்பட்டார்கள்; செய்த குற்றத்திற்காக அல்லாது, முன்நடவடிக்கையாகப் பலரும் கைது செய்யப்பட்டனர். திரு.பி.இராமமூர்த்தி முதலானோர் கைதானார்கள்.

சென்னையில் பக்கிங்காம் கர்னாடிக் ஆலைத் தொழிலாளிகள் 14,500 பேர்கள் தக்க அறிவிப்புக்குப் பின், வேலை நிறுத்தஞ் செய்தார்கள். சென்னை மாகாண ஆட்சி—தேசீய காந்தீய மரபில் வந்ததாகக் கூறப்பட்ட ஆட்சி, என்ன செய்தது? சாய்ந்தது எவர் பக்கம்? அந்த ஆலையின் வெள்ளை முதலாளிகள் பக்கம். அப்போதைய தொழில் அமைச்சர் டாக்டர் டி.எஸ்.எஸ்.இராசனுக்கு அப்போராட்டம் எப்படித் தோன்றிற்று? பொது அமைதிக்கும், ஆட்சிக்கும் வேட்டு வைக்கும் முயற்சியாகவே தோன்றிற்று.

பல்லாண்டுகளுக்கு முன்பு, சேரன்மாதேவி குருகுல மாணவர்கள் அனைவருக்கும் சமபந்தி நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரசின் செயற்குழு முடிவு செய்த போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தன் உறுப்பினர் பதவியை உதறி, விலகியவர்