உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

பெரியாரும்‌ சமதர்மமும்‌

“இம்மாதிரி எழுதியிருப்பதற்குப் பொருத்தம் இருப்பது போலவே, சில நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. கல்கத்தா ரயில் விபத்தைக் காரணமாகக் காட்டி, சட்டசபைகளிலும், காங்கிரஸ் பத்திரிகைகளிலும், காங்கிரஸ்காரர், காங்கிரஸ் பிரசாரமும், கமயூனிஸ்டு ஒழிப்புப் பிரசாரமும் செய்கிறார்கள். இந்தச் சாக்கில், நமக்கு இரண்டு ஓட்டு கிடைத்தால் போதும் என்று கருதி, காங்கிரஸ் தலைவர்கள், ‘இந்த மாதிரி நாச வேலைக்காரருக்கா, தேர்தலில் ஆதரவு காட்டப் போகிறீர்கள்’ என்று பொது மேடைகளில் பேசி வருகிறார்கள்.

“எப்படியோ போகட்டும். காங்கிரஸ்—கம்யூனிஸ்ட் தகராறு இப்போது நிற்கப் போவதில்லை. இந்த இரண்டு கட்சிகளில் ஒன்று ஒழிந்தால்தான், மற்றொன்று உயிர் பிழைக்க முடியும். இரண்டில் எதற்குச் செல்வாக்கிருக்கிறதோ, எது உண்மையோ, அது பிழைக்கட்டும்.

“ஆனால், ஒரு சங்கதியை மட்டும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. ரயில் விபத்து செய்யும் தேசத் துரோகிகளுக்கு, பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் என்ன தண்டனை விதித்தார்களோ, அதே தண்டனையை விதித்தால்தான், அவர்கள் கொட்டத்தை அடக்க முடியும் என்று யாரோ ஒருவர் எழுதியதாக, காங்கிரஸ் தமிழ்ப் பத்திரிகையொன்றில் வெளியாகியிருக்கிறது.

“என்னைப் பொறுத்த மட்டில், நான் இதை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன். கட்டாயம் பிரிட்டிஷார் செய்தது போலச் செய்ய வேண்டியதுதான்.

“சிறைக்குள் இருந்து கொண்டே, ரயிலைக் கவிழ்க்கும் வேலைகளைச் செய்த இந்தக் கூட்டத்தாருக்குச் சிறைக்குள் இனி இடம் அளிககக் கூடாது. இந்திய மந்திரிகள் இவர்களை டெல்லிக்கு வரவழைத்து, ஆட்சியை இவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவர்களையெல்லாம் மந்திரிகளாக உட்கார வைத்து, இந்த பஞ்ச காலத்தில் இவர்கள் ஆட்சி நடத்த முடியாமல் தத்தளிக்கும்படி செய்ய வேண்டும்.

“வெள்ளைக்காரர்கள் இப்படித்தானே செய்தார்கள். போலீஸ்காரர்கள் மீது தீயிட்டுக் கொளுத்தியவர்கள், சட்டசபையில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தந்திக் கம்பியை அறுத்தவர்கள், ஜில்லா போர்டு தலைவர்களாய் இருக்கிறார்கள். தபாலாபீசைக் கொளுத்தியவர்கள், மாதம் ஆயிரம் இரண்டாயிரம் சம்பாதிக்கிறார்கள். ரயிலைக் கவிழ்த்தவர்கள், மந்திரிகளாய் இருக்கிறார்கள்: