உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

பெரியாரும்‌ சமதர்மமும்‌

கையாளும்படி செய்தன. பொது உடைமைக் கட்சிக்கு இருந்த தடையை நீக்கி விட்டு, பொதுத் தேர்தல் நடத்த இந்திய அரசு விரும்பியது.

தலை மறைவாக இருந்த பொது உடைமை வாதிகள் சிலர், இரகசியமாகக் கூடினர். கலந்துரையாடினர். ‘வேட்டு’ முறையைக் கை விட்டு விட்டு, ‘ஓட்டு’முறைக்கு மாறுவது, என்று முடிவு செய்தனர். பின்னர் இம்முடிவு, நாடு தழுவிய பெரிய கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பொது உடைமைக் கட்சியின்மேல் இருந்த தடை நீக்கப் பட்டது; பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

சென்னை மாகாணத்தில், தந்தை பெரியாரின் தூண்டுதலால், காங்கிரசு அல்லாத கட்சிகளிடையே தேர்தல் உடன்பாடு உருவாயிற்று. காங்கிரசை எதிர்த்து, பலமான போட்டி, உருவாயிற்று.

ஏற்கனவே, குறிப்பிட்ட, அடக்கு முறைகளுக்கு மேலாக, உணவுப் பற்றாக்குறை பற்றி, பொது மக்கள் காங்கிரசு ஆட்சியின் மேல், வெறுப்புக் கொண்டிருந்தார்கள்.

போட்டியிட்ட கட்சிகள் சிலவற்றிற்குள்ளே ஏற்பட்ட தேர்தல் உடன்பாடு—தந்தை பெரியாரின் சூறாவளித் தேர்தல் சுற்றுப் பயணம்—முதலியன காங்கிரசைச் சிறுபான்மைக் கட்சியாக்கிற்று.

ஆட்சி இயந்திரத்தைக் கையில் வைத்திருந்த காங்கிரசு கட்சி, மாகாண சட்டசபைக்கு 367 இடங்களுக்குப் போட்டியிட்டு, 152 இடங்களை மட்டுமே பிடித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 131 இடங்களில் போட்டியிட்டு 62 இடங்களைப் பிடித்தது. எந்தக் கட்சியிலும் சேராது நின்ற 667 பேர்களில் 62 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

சட்ட மன்றத்தில் சிறுபான்மையாகி விட்ட போதிலும், காங்கிரசு கட்சி அமைச்சரவை அமைத்தது. மற்ற எந்தக் கட்சியும் பெறாத அளவு அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற காரணத்தால், காங்கிரசு பொறுப்பேற்றது. அரசியல் துறவு பூண்டிருந்த ஆச்சாரியார் முதல் அமைச்சரானார். அதற்கு உதவும் பொருட்டு, சட்டமன்ற மேலவைக்கு உறுப்பினராக, ஆளுநரால் நியமிக்கப்பட்டார்,