2. காங்கிரசில் பெரியார்
சாதி ஏற்றத்தாழ்வு பல்வேறு உருவங்களில் மக்களை வாட்டியது. சமுதாய ஏணியின் கீழ்ப் படிக்கட்டுகளில் உள்ளவர்கள், கோயிலுக்குள் நுழையக் கூடாது; பொதுத் தெருக்களில் நடமாட முடியாது: பொதுக் கிணறுகள், குளங்களைப் பயன்படுத்த முடியாது. ஆறுகளில் தனித் தனிப் படித்துறைகள். இப்படிப் பல்வேறு வகையாக மக்களை வதைத்தது.
கேரளத்தைச் சேர்ந்த வைக்கம் என்னும் ஊரில் போராட்டமொன்று தொடங்கப்பட்டது. என்ன போராட்டம்? கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில், ஈழவர் சமுதாயத்தார் நடக்க உரிமை கோரி, போராட்டம் தொடங்கப்பட்டது. இது 1924-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.
அப்பக்கத்து முற்போக்குவாதிகள் சிலர் மறியல் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். சில நாள்கள் வரை மறியல் செய்த தொண்டர்கள் மட்டும் கைது செய்யப்பட்டார்கள். பிறகு மறியல் குழுவைச் சேர்ந்த பதின்மூன்று பேர்கள் மொத்தமாகக் கைது செய்யப்பட்டார்கள்.
மறியல் நின்று போகக் கூடிய நெருக்கடி ஏற்பட்டது. போராட்டத் தலைவர் கிரூர் நீலகண்ட நம்பூதிரிபாத் ஈ. வெ. ராமசாமிக்கு அழைப்பு அனுப்பினார். ஈ.வெ.ரா. அப்போது தமிழ்நாட்டில் காங்கிரசின் தலைவர். வைக்கம் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, அதை நடத்துமாறு ஈ.வெ.ரா.வுக்கு அழைப்பு வந்தது.
பெரியார் வந்து பொறுப்பேற்கா விட்டால், மறியல் தோற்று விடுமென்று தந்தி மேல் தந்தி வந்தன. பெரியார் வைக்கம் சென்றார்.
வைக்கம், திருவிதாங்கூர் அரசைச் சேர்ந்தது. திருவிதாங்கூர் அரசர் ஈ. வெ. ராமசாமிக்கு நண்பர்; மிகவும் வேண்டியவர். பொதுத் தொண்டில் நட்பு குறுக்கிடும்படி விடலாமா? கூடாது. தனிப் பாசம் திசை திருப்ப விடலாமா? ஆகாது.
ஈ.வெ. ராமசாமி, அரசரின் அன்பிற்குத் தாட்சண்யப்படவில்லை. வைக்கம் போராட்டத்திற்குப் பொறுப்பேற்றார்.