உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

பெரியாரும்‌ சமதர்மமும்‌

சீருடை வழங்கினார்கள். இது முழுக்க, முழுக்க மக்கள் செலவில் நடந்தது. வசதி படைத்தவர்கள், அதே சீருடையைத் தங்கள் செலவில் தைத்துக் கொண்டார்கள்.

பல சாதியினரும் ஒன்றாக அமர்ந்து உண்டது, சாதி முறையை முறித்தது. சீருடை சாதி வேற்றுமைகளையும், ஏழை பணக்காரர் என்ற தோற்றத்தையும் மாற்றிற்று.

‘எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் இனம்,’ என்ற மனப்போக்கை வளர்க்கவே, இரண்டு சுமைகளும் என்பதை ஆசிரியர்களும், பொதுமக்களும், அலுவலர்களும், அமைச்சர்களும் நாடறியக் கூறினார்கள்.

நூறாண்டு காலமாக நடந்து வந்த எண்ணிக்கைக்குச் சரியாக, ஏழெட்டு ஆண்டுகளில் புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன. முந்திய பள்ளிகளில் கூட இடம், தளவாடங்கள், பாடக் கருவிகள் போன்றவை பற்றாக்குறையாக இருந்தன. அவற்றோடு, புதிய பள்ளிகளுக்கு அத்தனையும் புதிதாகத் தேட வேண்டும். ஏறத்தாழ, பதினைந்தாயிரம் புதிய பள்ளிகளுக்குத் தேட வேண்டும். அரசு, அப்பெரும் பொறுப்பை, மக்களிடம் ஒப்படைத்தது. அந்தந்த ஊர் மக்களே தனித் தனியாகவோ, கூட்டாகவோ ஊர்ப் பள்ளியின் தேவைகளை நிறைவு செய்தார்கள். ‘பள்ளிச் சீரமைப்பு இயக்கம்’ என்னும் பெயரில் நடந்த அந்த மாநிலம் தழுவிய மக்கள் உதவி, கல்வியின் பால் கவனத்தைத் திருப்பியது.

தன்மான இயக்கத்தின் தொடக்க காலத்தில், கலப்புத் திருமணம் பற்றியே பேச்சாக இருந்தது போல், காமராசர் காலத்தில் கல்வி பற்றியே எங்கும் பேச்சு.

தொடக்க, உயர் நிலைப் பள்ளிக் கல்வி வளர்ந்தது போலவே, பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வியும் வளர்க்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கும், பின் தங்கியோருக்கும் தொழிற்கல்வி தாராளமாகக் கிடைக்க வழி செய்யப்பட்டது.

தந்தை பெரியாரின் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது! காமராசரைக் கல்விக் கண் கொடுத்த வள்ளல் என்று போற்றத் தலைப்பட்டார். காமராசர் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, பெரியாரின் தோள்களில் விழுந்தது.