உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. பகத்சிங்கும் பெரியாரும்

1930 ஆம் ஆண்டு மே திங்கள், ஈரோட்டில் நடந்த இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில், ஈ.வெ.ரா. இயக்கத்தின் இலட்சியம், சமதர்மம் என்பதைச் சுட்டிக் காட்டினார். பெரியாரின் கருத்து இயக்கக் கருத்தாக ஒலித்தது. ஓராண்டுக் காலம் அப்படி ஒலித்துப் பரவிய பிறகு, அது இயக்கத்தின் கொள்கையாக, விருதுநகரில் நடந்த வாலிபர் மாநாட்டில், ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், வரலாற்று அதிர்ச்சியுடைய நிகழ்ச்சியொன்று நடந்தது. பகத் சிங், இராஜ குரு, சுக தேவ் ஆகிய மூவர், லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார்கள்.

இம்மூவர் பேரில், சாட்டப்பட்ட குற்றச்சாட்டு என்ன? சதிக் குற்றம். என்ன சதி? ஆங்கில ஆட்சியை ஒழிக்கச் சதி செய்தார்களாம்.

அதன் புற வெளிப்பாடு என்ன?

லாகூரில் துணை சூப்பிரெண்டாக இருந்த சாண்டர்ஸ் என்ற ஆங்கிலேயர் மேல் வெடிகுண்டு வீசிக் கொன்றார்கள்.

‘இக்கொலைக்கு மூவரும் உடந்தை; இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலை’—இப்படிக் குற்றஞ்சாட்டி, வழக்கு தொடரப்பட்டது. வழக்கு மன்றத்தின் முடிவு என்ன? குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டனவென்று முடிவு செய்தார்கள். எனவே, தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. அது நிறைவேற்றப் பட்டது. இளம் உயிர்கள் மூன்று பலியாயின.

எதற்கு? இந்திய விடுதலைக்கு. அரசியல் விடுதலைக்கு மட்டுமா? இல்லை; பொருளாதார விடுதலைக்கும்; அறிவின் விடுதலைக்கும்.

பகத் சிங், நாட்டுப் பற்றுக்கு ஆழமான பொருள் கொண்டிருந்தவர். அவர் பக்தர் அல்லர்; அவருக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. எனவே, பாரதத்தை வழிபடும் ‘பூமா தேவி’யாகக் கருதவில்லை. பின் எப்படிக் கருதினார்?