52
பெரியாரும் சமதர்மமும்
அன்றைய இந்தியா, அயல் நாட்டுக்காரர்களிடம் மட்டுமா சிக்கிச் சீரழிந்தது? இல்லை. தொலைவிலிருந்து வந்த ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர், போர்ச்சுக்கீசியர் மட்டுமா மக்களைச் சுரண்டிக் கொண்டிருந்தார்கள்? இல்லை.
இந்திய நாட்டின் கணிசமான நிலப்பரப்பு, இந்திய மன்னர்களின் ஆளுகையில் இருந்தது. அய்நூறுக்கு மேற்பட்ட குறுநில மன்னர்கள் வைத்ததே சட்டம். அப்பகுதிகளில் சிலவற்றில் மட்டுமே, நாகரீக ஆட்சி நடந்தது. மற்றவற்றில் காட்டு தர்பார் நடந்து வந்தது.
அன்னியர் ஆட்சிகளிலிருந்தே இந்தியப்பகுதி விடுதலை பெற்று, மக்களாட்சி முறைக்கு வருவதைப் போன்றே, மன்னர் ஆட்சிப் பகுதிகளும், மக்களின் நேரடி ஆட்சிக்கு வருவதே சரி. அத்தகைய முடிவுக்குத் தன்மான இயக்கத் தொண்டர்கள் வந்தார்கள்; 1932இலேயே வந்தார்கள்.
‘சுதேச சமஸ்தானங்கள் என்பவைகளையெல்லாம் மாற்றி, இந்தியா முழுவதையும் தொழிலாளிகள், குடியானவர்கள், சரீர வேலைக்காரர்கள் என்பவர்களுடைய நேரடியான ஆட்சிக்குக் கொண்டு வருவது’ என்பது மற்றோர் முடிவாகும்.
உழைக்கும் மக்களின் நேரடி ஆட்சியாக, சோவியத் ஆட்சி தோன்றியதால்தான், அது தப்பிப் பிழைத்தது. அக்டோபர்ப் புரட்சி வெடித்ததும், வாக்குரிமையை உழைக்கும் மக்களுக்கு மட்டுமே வழங்கியதற்குப் பதில், எல்லா மக்களுக்கும் கொடுத்திருந்தால், நில உடைமைக்காரர்களும், சொத்துடைமைக்காரர்களும் நாளையொரு நாள், அந்நிலைக்கு உயரலாம் என்று கனவு காண்போரும், சமதர்ம ஆட்சிமுறையை முளையிலே கிள்ளி எறிந்திருப்பார்கள். அப்படிச் செய்யாமல், ‘சுகஜீவி’களுக்கு மட்டும் வாக்குரிமை கொடுத்ததால், அப்புல்லுருவிகள் சமதர்ம முறையை அழிக்க முடியவில்லை.
அதை நினைவில் கொண்டே, இந்திய ஆட்சி, உடல் உழைப்பாளர்கள் ஆட்சியாக இருக்க வேண்டுமென்று முடிவு எடுக்கப்பட்டது.