உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

பெரியாரும்‌ சமதர்மமும்‌

சாதி வெறி தணிவதற்குப் பதில், தேர்தல் தூண்டுதல்களால், அதிகமாவதையே, தன்னாட்சி பெற்ற இந்தியாவில் காண்கிறோம்.

விதவைத் திருமணம், இன்றும் அத்திப் பூத்தாற் போல்தான் நடக்கிறது.

பெண்களைப் படிக்க அனுப்புவதில், ஓரளவு முன்னேற்றங் காண்கிறோம்; எனினும், சமநிலை தொலைவில் இருக்கிறது. பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டம், பெண் கல்விக்கு இடையூறாக வருகிறது.

அன்னிய ஆட்சி ஒழிந்த பிறகு, இந்தியாவில் வறியோர் எண்ணிக்கை நஞ்சு போல் ஏறக் காண்கிறோம். தொழில்கள் ஏராளமாகப் பெருகியும், நீர்த் தேக்கங்கள் பற்பல ஏற்பட்டும், ஒரு வேளைச் சோற்றுக்கே திண்டாடுவோர் எண்ணிக்கை பெருகக் காரணமென்ன?

பழைய சுரண்டல் முறை நீடித்தல்; அதிக வலுப்பெறுதல், ஓர் காரணம். அதை விட ஆழமாக வேரூன்றி விட்ட மற்றோர் காரணம், இந்தியாவின் தனித் தீங்காகும். அது என்ன?

கடவுள் வழிபாடு, பூசை என்றும், திருமணம், வளைகாப்பு, காது குத்தல் ஆகிய சடங்குகளின் பேராலும், உணவுப் பொருட்களை, நேரத்தை, முயற்சியைப் பாழாக்குதல் மற்றோர் காரணம். தன்னாட்சி இந்தியாவில், அதுவும் அண்மைக் காலத்தில், ஆளுநர் முதல் ஏவலர் வரை, அரச மரத்தடி பொம்மைக்கு முழுக்காட்டக் கூட, முன்னே நிற்கிறார்கள். இதற்கா பெரிய அதிகாரிகள்? எத்தனை பொருட் செலவு? குடம் குடமாகப் பாலைக் கற்சிலை மேல் கொட்டினால், ஆயிரக் கணக்கான சிலைகள் மேல் கொட்டிப் பாழாக்கினால்—நாள் தவறாது பாழாக்கினால்—பச்சைக் குழந்தைகளுக்குப் பால் எங்கிருந்து கிடைக்கும்?

நெய் விளக்குகளுக்காக எரிக்கப்படும் நெய்யிற்கு அளவேது? எண்ணெய்க்குக் கணக்கேது? மக்களுக்கு இன்றியமையாத உணவுப் பொருட்களை இந்த அளவு அழிக்கும் மதம் இந்து மதம் ஒன்றே! அழிக்கும் மக்கள் இந்துக்கள் மட்டுமே!

விவரம் தெரியாத குழந்தையிடம் வைரத்தைக் கொடுத்தது போல், பகுத்தறிவு பெறாத பார்ப்பனரல்லாத ஊழியர்கள் கைகளில், உயர்வு ஊதியம், மேலும் உயர்வு ஊதியம்