16. புரட்சி ஏட்டின் தலையங்கம்
ஈரோட்டில், சுயமரியாதை இயக்கச் செயல் வீரர்களால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை சமதர்மத் திட்டம் பற்றி, தோழர் எஸ்.இராமநாதனுக்கும், தோழர் சிங்காரவேலருக்கும் இடையே எழுந்த வாதம், கருத்து மாறுபாடு போல் முதலில் தோன்றியது. உண்மையில் அது கருத்து மாறுபாடு அல்ல என்பது பின்னர் புலப்பட்டது; நடைமுறை பற்றிய மாற்றுப் போக்கு மட்டுமே என்பது சில தினங்களில் வெளிப்பட்டது.
இதற்கிடையில், பெரியாரின் வார் இதழான ‘புரட்சி’ சமதர்மக் கருத்தைப் பரப்புவதில், முனைப்பாக இயங்கியது. பற்பல பகுதிகளில் இருந்தும், சமதர்மத்திற்கு ஆதரவான கட்டுரைகள் வந்தன; வெளியாயின. கொழும்பிலிருந்து, தோழர் அய்.எம். இப்ராஹீம் என்னும் அன்பரின் கட்டுரையில்,
‘சர்வ மதங்களும், சர்வ முதலாளித்துவமும் ஒழிந்து, பகுத்தறிவு பரவி, சமதர்மம் நிலவினாலன்றி, மக்களுக்கு விமோசனம் இல்லை’ என்று திட்டவட்டமாக எழுதியிருந்தார். இப்படிப் பல தெளிவான, தீவிர சிந்தனையாளருக்கு ‘புரட்சி’ இடமளித்தது. அதோடு நின்றதா? இல்லை.
17-12-33 நாளைய ‘புரட்சி’யின் தலையங்கத்தைப் பார்ப்போம். அதன் ஒரு பகுதி வருமாறு:
“நாமும், நமது பகுத்தறிவைக் கொண்டு யோசிப்போம்.
ஒரு தனிப்பட்ட மனிதன், சமூக வாழ்வில் எந்தக் காரணத்தாலோ, உயர்ந்த சாதியானாகப் பாவிக்கும் யோக்கியதையை அடைந்து வருவதைச் சில தனி உரிமைகளை அடைந்து வருவதை, இன்றைய தினம் நாம் ஆட்சேபித்து, அப்படிப்பட்ட உரிமை, யாவருக்கும் இருக்க வேண்டும் என்றும், அது எல்லோருக்கும் சரி சமத்துவமாக இருக்க வேண்டுமென்றும் கூறுகிறோம். இன்றைக்குச் சில சட்ட இடையூறுகள் இருந்தாலும், அவைகளையும் மாற்றி, புதிய சட்டங்களையும், புதிய பழக்கங்களையும் செய்ய வேண்டுமென்கிறோம்.