vi
திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையைத் தொடங்கினார். சுய மரியாதைச் சமதர்மக்காரராக வாழ்ந்து கொண்டே, அரசுப் பணிகளில் உயர் பதவிகளைப் பெற்றார்.
தமிழ்நாடு பொதுக் கல்வி—பொது நூலக இயக்குநராக, தமிழ்நாட்டின் இணை கல்வி ஆலோசகராக, தமிழ்நாட்டின் தலைமைக் கல்வி ஆலோசகராகவும், கூடுதல் செயலாளராகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக, இவ்வாறாகப் பல பெரிய பொறுப்புகளில் இருந்து பணியாற்றினார். இந்திய அரசின் ‘பத்மஸ்ரீ’ பட்டம் பெற்ற இவருக்குச் சென்னைப் பல்கலைக் கழகம், டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்துள்ளது.
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும்—இன்றும்- தம் 75-ஆம் வயதிலும், சுய மரியாதை—சமதர்மக் கொள்கை பரப்பலுக்கு நாள் தோறும் எழுதியும், பேசியும், தொண்டாற்றி வருகிறார். முதலாவது சுயமரியாதை மாநாட்டில் கலந்து கொண்ட நெ.து.சு. அவர்கள், சுயமரியாதை இயக்கத்தின் சமகாலத்தவராகிறார். பெரியார் சமதர்மத்துக்காகப் பட்ட பாட்டினை விளக்கித் தாம் எழுதியுள்ள நூலுக்கு இவர் “பெரியாரும் சமதர்மமும்” எனப் பெயரிட்டுள்ளார். நேரில் உரையாடுவது போன்ற உணர்ச்சி, நெ.து.சு. அவர்களுடைய எழுத்தில் காணப்படும் தனிச் சிறப்பு. படிப்போர்க்குச் சோர்வூட்டாமல், கதையோட்டம் போல், நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தி, இவர் இந்நூலினை எழுதியுள்ளார்.
இராஜாஜி புகுத்திய கட்டாய இந்தி—குலக் கல்வித் திட்டம்… திராவிடர் கழத்திலிருந்து அண்ணா பிரிந்தது… தமிழகக் கம்யூனிஸ்டு கட்சியும், பெரியாரும்… ஆகிய செய்திகள் குறித்து, இவர் இந்நூலில் கூறும் ஆராய்ச்சி நோக்குடைய கருத்துக்கள், பொது வாழ்வில் உள்ள திறனாய்வுக்காரர்கள்—கட்டுரையாளர்கள்—பேச்சாளர்கள் ஆகியோர் முழுதும் அறிந்து கொள்ள வேண்டியனவாகும்.
இந்தியச் சூழலுக்கேற்பப் புரட்சி இங்கே மலர வேண்டும் என்ற சிந்தனையும், செயலும் கொண்டவர்கள் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய நூல் “பெரியாரும் சமதர்மமும்”.
பெரியார் அன்பர்களின் “வீட்டு நூலகத்தில்” இடம் பெறும் தகுதியும்—சிறப்பும், தேவையும் கொண்ட நூல் “பெரியாரும் சமதர்மமும்”.
—கலசம்