பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

கிறது. ஏழை வரி எனும் ஜக்காத் கடமை பொருளால் இறை வணக்கம் புரிவதாகும். புனித மக்காவிலுள்ள இறையில்லமாகிய காஃபா செல்லும் ஹஜ் கடமை மூலம் இறைவனை மனத்தாலும் உடலாலும், பொருளாலும் இறை வணக்கம் செய்ய இயலுகிறது.

ஐங்கடமைகள் தரும்
அற்புதத் தியாக உணர்வு

ஐந்து இஸ்லாமியக் கடமைகளிலும் நீக்கமற நிறைந் திருக்கும் மற்றொரு சிறப்பு தியாக உணர்வாகும்.

வைகறை முதல் இரவு வரை ஐந்து முறை தொழும் ஒருவர் தன் அரிய நேரங்களை இறைவனுக்காகத் தியாகம் செய்து இறை வணக்கம் புரிகிறார். அதிகாலையில் தன் இன்பமான தூக்கத்தைத் துறக்கிறார். ஐவேளை தொழுகை நேரங்களில் தான் விரும்பும் கேளிக்கைகளையெல்லாம் உதறித் தள்ளி, பொருள் தேடும் வேட்கையை நிறுத்தி வைத்து இறைச் சிந்தனையாளராக மாறிவிடுகிறார்.

இறை வணக்கத்திற்காக தொழும் பொழுதெல்லாம் தன் உடலைக் குனிந்தும் மண்டியிட்டும், தரையில் நெற்றி படிய தலை சாய்த்தும், உடல் வருந்த தொழும்பொழுது தன் உடல் சுகத்தையெல்லம் தியாகம் செய்து விடுகிறார்.

ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கும் ஒரு முஸ்லிம் புலர்காலைக்கும் முன்னதாகவே உணவு உண்பதை நிறுத்திவிடுகிறார். மாலை மயங்கிய பிறகு உணவு கொள்கிறார். இடைப்பட்ட பகற்பொழுது முழுவதும் ஒரு சொட்டு நீரும் பருகாமல் நோன்பு நோற்கிறார். பகல் முழுவதும் பசி, தாகம், அடக்கி இறைச் சிந்தனையாளராக மாறுகிறார். பகற்பொழுது முழுவதும் தான் விரும்பி உண்ணும் உணவுகளையெல்லாம் ஏறிட்டும் பாராது தியாகம் செய்கிறார். தான் அடிக்கடி குடிக்கும் தேநீர், காபி,