பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

கட்டாயமில்லை. இடம் தூய்மையாக இருந்தால் போதும், எங்கிருந்தும் தொழலாம்.”

இவ்வாறு நான் கூறி முடித்தவுடன் அவர் அகமும் முகமும் மலர இஸ்லாத்தின் ஐவேளைத் தொழுகைக்கு இப்படியொரு உட்கருத்து இருப்பதை அறியாமல் வினா தொடுத்துவிட்டேன். சமயவியல் அடிப்படையில் மட்டுமல்லாது உளவியல் அடிப்படையில் பார்த்தால்கூட மனிதனை தெய்வீகச் சிந்தனையுடன் நல்வழிப்படுத்த இதைவிட வலுவான வேறு வழியேதும் இருப்பதாகத் தெரியவில்லை” எனப் பாராட்டுரை வழங்கினார்.

இஸ்லாமிய மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளான இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஏழைப் பங்கான ஜகாத், இறுதிக் கடமையான ஹஜ் ஆகிய அனைத்துமே இறைவணக்க முறைகளாகவே அமைந்துள்ளன.

‘ஒரே இறைவன்; உருவமற்றவன்; இணை துணை இல்லாதவன் என்ற இறை நம்பிக்கையான கலிமா மூலம் ஒரு முஸ்லிம் உள்ளத்தால் இறைவணக்கம் புரிகிறான்.

ஐவேளைத் தொழுகையின் மூலம் உடலால் இறை வணக்கம் நடைபெறுகிறது. ரமளான் மாதத்தில் முப்பது நாட்கள் பகலில் உண்ணாமலும் சொட்டு நீரும் பருகாமலும் நோன்பு நோற்பதன் மூலம் உடலாலும் உள்ளத்தாலும் இறைவணக்கம் நிகழ்த்தப்படுகின்றது. தான் வருந்தியுழைத்துத் தேடிய பொருளிலிருந்து நாற்பதில் ஒரு பங்கைதன் கைப்படவே ஏழை எளியவர்க்கு ஜகாத்தாக ஈவதன் மூலம் பொருளால் இறைவணக்கம் செய்யப்படுகிறது. பொருள் வசதியுள்ளவர்கள் வாழ்வில் ஒரு முறையேனும் மக்காவிலுள்ள கஃபா இறையில்லம் சென்று தேச, இன, மொழி, நிற பேதங் கடந்த நிலையில் அனைவரும் சமம் என்பதை எண்பிக்கவும், அனைவரும் ஆதாம் பெற்ற மக்களே, சகோதரர்களே என்பதைச் செயல் வடிவில் நிறுவுவதற்கான ஹஜ் கடமை உள்ளத்தாலும், உடலாலும், பொருளாலும்