பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

201

மதத்தில் அரசியல் கலப்பது மிக மோசமான விளைவுகளுக்கு வழி வகுக்கும் என்பது கடந்தகால கசப்பான உண்மையாகும்.

எனவே, வீட்டிலும், வழிபாட்டுத் தலங்களிலும், அதற்கென உருவாக்கப்பட்டுள்ள வளாகங்களோடு சமய நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு, சமுதாய வீதிக்கு வரும்போது சமயங்கடந்த இந்தியனாக எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் இந்திய மக்கள், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்திய மக்கள், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் இந்நாட்டு மக்கள் எனப் பாரதி கூறிய வாழ்வியல் நெறிக் கேற்ப வாழ முனைய வேண்டும். இதன் மூலம் உண்மையான இந்தியப் பண்பாட்டை நிலை நிறுத்த முடியும். சமயங்களைக் கண்ணியப்படுத்தவும் மனித நேயத்தை வளர்க்கவும் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தவும் இயலும். இதுவே வலுவான பொருளாதார வளர்ச்சிக்குரிய ராஜபாட்டையாக அமைய முடியும்.

‘மந்தையை விட்டுச் செல்லும் ஆட்டைத்தான் ஓநாய் இரையாக்கிக் கொள்கிறது’ என்ற பால பாடத்தை நாம் எப்போதும் நினைவில் கொண்டு, நாட்டுப் பாதுகாப்புக்கு வலுமிக்க கேடயமாக வேண்டும். சமய நல்லிணக்கமே சமுதாய வலுவுக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை என்பதை இனியேனும் மறக்காமல் கடைப்பிடித்து வெற்றி காண்போமாக.