பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன்னொளி


புத்த மார்க்கம் மீண்டும் இங்கு பொலிவு பெறுது, நமது சர்க்காரின் சின்னமாக அசோக சக்கரம் இருப்பது காணீர்! கருத்தற்ற காரியமல்ல அது” என்று ராதாகிருஷ்ணன் கூறினார், சாஞ்சியில், புத்த மார்க்கப் பெரியோர்கள் கூடியிருந்த மாண்பு மிகுந்த மன்றத்தில்.

புத்தரின் முக்கியசீடர்களான சாரி புத்தர், மகாமொக மன்னர் ஆகியோரது நினைவுச் சின்னங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்—சாஞ்சியில், தனியாகக் கட்டிடம் அமைத்து, அந்த நினைவுச் சின்னங்களைப் புனிதப்பொருள் என்று பக்தியுடன் கொண்டாடிப் புனித விழா நடத்தினர். பண்டித ஜவஹர் பேசினார்— பல்வேறு நாடுகளிலிருந்தும் புனித விழாவுக்கு வந்திருந்த பெரியோர்கள் பேசினார்—டாக்டர் ராதாகிருஷ்ணன், அதுபோது பேசியது கேட்டு, புத்த மார்க்கத்திலே உள்ளவர்கள் மட்டுமல்ல, புத்த மார்க்கத்தின் மாண்புகளை மதித்திடும் அறிவுடையோர் அனைவருமே களித்திருப்பார்கள். உறுதியுடனும் உவகையுடனும், கேட்போர் சிந்தையிலே மகிழ்ச்சி பொங்கும் விதமாக அல்லவா, டாக்டர் பேசினார்—புத்த மார்க்கம் மீண்டும் இங்கு பொலிவு பெறுகிறது! என்று. பொதுப்படையாகக் கூறுவது போதாது என்று, ஆதாரமும் காட்டினார்—