பக்கம்:பொன் விலங்கு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 221

நடுவே அகன்ற சாலையோடு அந்த வீதி அமைந்திருந்தது. முழுவட்டமான அந்த வீதியின் மொத்தச் சுற்றளவு பத்துமைல். ஆதலால் அதற்கு டென் மைல்ஸ் ரவுண்டு என்றும் அந்த ஊரில் ஒரு பெயர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த அமைப்பின்படி வீதியின் ஒரு சிறகில் மட்டுமே வீடுகள் இருந்தன. எதிர்ச்சிறகில் ஒரே அளவாய் நெடிதுயர்ந்த மரங்களுக்கு அப்பால் பளிங்குநீர் சலசலக்க ஏரி அகன்று விரிந்திருந்தது. ஒரே சீராக வாய்த்திருந்த ஒவ்வொரு வீட்டு வாயிலிலிருந்தும் மாடி பால்கனியிலிருந்தும் எதிரே பார்த்தால் வெள்ளை அல்லிப் பூக்களும், செவ்வல்லிப் பூக்களுமாக ஏரி நீர்ப் பரப்பும் அதில் அங்கும் இங்குமாக விரைந்து கொண்டிருக்கும் படகுகளும் மனிதர்களும் தெரிவார்கள். மேலை நாட்டுப் பாணியில் நடத்தப்படுகிற பெரிய பெரிய ஒட்டல்களும், திரைப்பட அரங்குகளும், கடைகளும், கம்பெனிகளும், எல்லாம் ஏரியைச் சுற்றியிருக்கும் இந்தப் பத்து மைல் வட்டத்துக்குள்ளேயே இருந்தன.

மல்லிகைப் பந்தல் நகரத்தின் உயிர்நாடியான பகுதி லேக் சர்க்கிள் எனப்படும் இந்த டென் மைல்ஸ் ரவுண்டு'தான். ஒரே வரிசையான அளவொத்த மரம் செடி கொடிகளும் ஏரிக்குச் கரையிட்டாற்போல் பத்துமைல் சுற்றளவும் விளிம்பில் வகுக்கப்பட்டிருந்த சிறு பூங்காவும் எவர் கண்டாலும் மயங்கி விடும்படியான பெருமையை அந்த ஊருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தன. நான்கு பக்கமும் ஆகாயத்தின் நீல விளிம்போடு போய்க் கலக்கும் மலைகளின் நீலச்சிகரங்களுக்குக் கீழே சுற்றிலும் முத்துப் பதித்துக் குழிந்த கண்ணாடியை நடுவே வைத்தாற்போல் அந்த ஏரியும் வீடுகளும் மேலே மலையிலிருந்து பார்க்கிறவர் களுக்குத் தெரியும். பூபதி அவர்களின் கலைக் கல்லூரியும், மாணவர்களின் விடுதிகளும் இருந்த மேட்டிலிருந்து கீழே லேக் சர்க்கிளில் போய்க் கலக்கும் சிறிய சாலை ஒன்றில் அப்போது நடந்து சென்று கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரியிலிருந்து புறப்படுமுன் தனக்கும், முதல்வருக்கும் இடையே நிகழ்ந்திருந்த உரையாடலை மீண்டும் நினைத்தபோது கல்லூரி எல்லைக்குள்தான் மேலும் ஒரு விநாடி கூடத் தங்கியிருப்பது புத்திசாலித்தனமில்லை என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/223&oldid=595265" இலிருந்து மீள்விக்கப்பட்டது