பக்கம்:பொன் விலங்கு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பொன் விலங்கு

‘மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் பட்டப் பெயர் வைத்துக் கேலி செய்கிறார்கள். ஆசிரியர்கள் தங்களுக்கு மேலே உள்ளவர் களுக்குப் பட்டப்பெயர் வைத்துக் கேலி செய்து திருப்திப் படுகிறார்கள். இதற்கு ஒரு முடிவேயில்லையா? என்று மனம் நொந்த அவன் இவற்றுக்கெல்லாம் ஒரு விதிவிலக்குப் போலத்தான் ஒர் முழுமையான தீவிர இலட்சிய ஆசிரியனாக அந்தக் கல்லூரியில் விளங்க வேண்டுமென்று வைராக்கியம் கொண்டான். அன்று அவனை வகுப்புகளுக்குப் போகச் சொல்லவில்லை. முதல் நாளாகையால் வகுப்புகளும் அதிகமாக நடைபெறவில்லை. பேருக்கு இரண்டு மூன்று பீரியடுகளை நடத்திவிட்டு விட்டார்கள். கல்லூரி ஊழியனை அனுப்பித் தபாலாபீசிலிருந்து கடித உறைகள் வாங்கிவரச் செய்து ஊருக்குக் கடிதங்கள் எழுதினான் சத்தியமூர்த்தி. தந்தைக்கும், குமரப்பனுக்கும், இன்னொரு நண்பனுக்கும் கடிதங்களை எழுதிமுடித்த பின் கடைசிக் கடிதத்தை மோகினிக்கு எழுதலாமா என்று தோன்றியது. தபாலை மோகினியின் தாய் வாங்கி விட்டால் என்ன செய்வது என்ற தயக்கமும் கூடவே உடனெழுந்து முந்திய எண்ணத்தைச் செயலாக்க விடாமல் தடுத்துவிட்டது. கண்ணிர் பெருகும் விழிகளோடு அழுகின்ற இதயமும் ஏதோ ஒரு முறைக்காகச் சிரிக்கின்ற வாயுமாக அவள் தனக்கு விடை கொடுத்த அந்தக் காட்சியை நினைத்தான் அவன். 'நாமிருவரும் பிரியும் போது கண்ணீரும் அமைதியுமே இருந்தன என்ற கவிதை வரி நினைவு வந்தது. கல்லூரியின் சாயங்காலப் பாட வேளைகளும் முடிவதற்கு அறிகுறியாக மணி அடித்தது. விரிவுரையாளர்களும் பேராசிரியர் களும் ஒவ்வொருவராக எழுந்து புறப்படத் தொடங்கிவிட்டார்கள். சிலர் கல்லூரியிலிருந்தபடியே மாலையில் பூபதியின் வீட்டுத் தோட்டத்தில் நடைபெற இருந்த தேநீர் விருந்துக்குப் போகலாம் என்ற நோக்கத்தோடு அங்கே தங்கியிருந்தார்கள். சத்தியமூர்த்தி கடிதங்களைத் தபாலில் போட்டுவிட்டு லேக் சர்க்கிளில் அறைக்குப் போய்விட்டுத் திரும்பலாம் என்று புறப்பட்டிருந்தான். பாடனி விரிவுரையாளரும் தற்செயலாக உடன் வந்தார். ஆனால் நெருங்கி வந்து பேசவோ, பழகவோ பயப்படுகிறவர்போல் விலகி லகி முன்னால் நடந்து போனார் அவர். கேட் அருகே கல்லூரிவிட்டுக் காரில் போய்க்கொண்டிருந்த பாரதி சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் காரை நிறுத்திக் கொண்டு பதற்றத்தோடு கீழே இறங்கினாள். ஆனால் அதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/246&oldid=595315" இலிருந்து மீள்விக்கப்பட்டது