பக்கம்:பொன் விலங்கு.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 317

நன்றியும் தெரிவித்துவிட்டுப் போனான். இது ஒரு சாதாரண நிகழ்ச்சியானாலும் அன்றிரவு நீண்ட நேரம் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரி முதல்வர், வார்டனாக இருக்கும் துணை முதல்வர் என்று இப்படி ஒவ்வொருவராகத் தனக்கு எதிரிகளாகி வருவதை எண்ணியபோது எதிர் காலத்தைப் பற்றிச் சிந்திக்க வரட்சியாயிருந்தது. கெடுதல் செய்கிறவர்களுடைய பகைமையை நல்லவர்கள் விலை கொடுத்தாவது வாங்கிக்கொண்டு எதிர்க்க வேண்டும் என்று திருவள்ளுவர்கூறியிருக்கிறார்.

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை

என்ற குறளை நினைவு கூர்ந்தான் சத்தியமூர்த்தி, ஒரு நல்ல மனிதன் வாழ்க்கையில் தன்னுடைய ஒவ்வொரு தேவைக்காகவும் மட்டுமே போராட முடியாது. தன்னுடைய தேவைக்காகவும் நியாயத்துக்காவும் சேர்த்துப் போராட வேண்டியிருக்கும் என்று அடிக்கடி நினைக்கும் அந்த வாக்கியம் ஞாபகம் வந்தது அவனுக்கு. தான் எடுத்துக் கூறி விவாதித்த விஷயம் எதுவோ அதிலுள்ள நியாயத்துக்குச் செவி சாய்க்காமல், 'எட்டு மணிக்குள் இந்தப் பையனுடைய அறைக் கதவைத் திறந்து விட வில்லையானால் நான் இதைப் பற்றிக் கல்லூரி நிர்வாகியிடம் போய்ப் பேச வேண்டியிருக்கும் என்று கூறியதற்காக மட்டும் செவிசாய்த்து அந்த விளைவுக்கு அஞ்சியே வார்டன் அப்படி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டிருப்பதாகச் சத்தியமூர்த்திக்குத் தோன்றியது. சுற்றியிருக்கிற கெளரவமான மனிதர்கள் எல்லாரும் ஏதோ ஒரு விதத்தில் அருவருக்கத் தக்கவர்களாக அவன்கண்களுக்குத் தோன்றினார்கள். படிப்பையும் மதிக்காமல் நியாயத்தையும் மதிக்காமல் வறட்டு ஜம்பம் மட்டுமே கொண்டாடுகிறவர்களுக்கு நடுவே பழக நேரிடுவதைப் போல் ஒரு நல்ல மனிதனுக்கு ஆயுள் தண்டனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/319&oldid=595475" இலிருந்து மீள்விக்கப்பட்டது