பக்கம்:பொன் விலங்கு.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 பொன் விலங்கு

ஏறக்குறைய வீடு போர்க்களமாயிருந்த இந்த நேரத்தில் காலையில் சத்தியமூர்த்தியிடம் சொல்லிவிட்டுப் போயிருந்த குமரப்பன்திரும்பிவந்துசேர்ந்தான்.கோபத்தில் தந்தைநண்பனிடம் போய் அவனை ஏதேனும் அநாகரிகமாகப் பேசி விடக்கூடாதே என்பதற்காகச்சத்தியமூர்த்தி முந்திக்கொண்டு நண்பனை வரவேற்க எழுந்து சென்றான். நல்லவேளையாகத் தந்தை அப்படி ஏதும் அநாகரிகமாக நடந்து கொள்ளவில்லை. வீடுதேடி வந்த குமரப்பனை வா என்றுகூட ஒரு வார்த்தை சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டதைத் தவிர வேறு எந்த அவமானத்தையும் அவர் அப்போது அவனுக்குச் செய்யவில்லை. சத்தியமூர்த்தியின் தந்தையைப்பற்றிக் குமரப்பனுக்கு நன்றாகத் தெரியுமாதலால் அவன் அப்போது அவருடைய கனிவான வரவேற்பை எதிர்பார்க்கவும் இல்லை. சிரித்துக்கொண்டே உள்ளே போய்ச் சத்தியமூர்த்தியின் அம்மாவையும், தங்கைகளையும் பார்த்துப் பேசினான் குமரப்பன்.

"இருந்து ஒரு வாய் காப்பி சாப்பிட்டுவிட்டுப் போ' என்று சத்தியமூர்த்தியின் தாய் கூறிய வார்த்தைகளை மதித்துக் கூடத்து ஊஞ்சலில் கண்ணாயிரத்துக்குப் பக்கத்தில் போய் அவர் உட்கார்ந்திருந்தாற் போலவே கால்மேல் கால் போட்டுத் தானும் உட்கார்ந்து கொண்டான் குமரப்பன். சத்தியமூர்த்தியின் தந்தை கண்ணாயிரத்துக்குக் காப்பி கொடுத்துத் தடபுடலாக உபசாரம் செய்வதில் ஈடுபட்டிருந்தார். குமரப்பன் தன்னருகே வந்து கால்மேல் கால்போட்டு உட்கார்ந்ததை விரும்பாத கண்ணாயிரம் மெல்ல எழுந்திருந்து கூடத்தில் உலாவுவதுபோல் நடக்கலானார். அப்போது குமரப்பன் தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். அப்ஸ்டார்ட்கள் (திடீரென்று பணக்காரராகிய அற்பர்கள்) எல்லாம் பிறர் தங்களை மதிக்க வேண்டும் என்று தவித்து மரியாதை பசிபிடித்து அலைவார்கள். உலகம் தங்களை மதிக்கிறதா, இல்லையா என்பதை அறிந்து கொள்வதிலே மற்றவர்களை விட இந்த அற்பர்களுக்கு ஆசையும் தாபமும் அதிகம்' என்று மனத்திற்குள் நினைத்துக்கொண்டு சிரித்தான் குமரப்பன்.

"அடடா இதென்ன எழுந்து விட்டீர்கள்? உட்காருங்கள் சார் ஊஞ்சலில் உட்காரச் சிரமமாக இருக்கிறதென்றால் நாற்காலியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/428&oldid=595672" இலிருந்து மீள்விக்கப்பட்டது