பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிம்பிசாரர் ⚫ 131

இல்லாத உலகத்தை அடைவதே மனிதனின் மகோன்னதமான இலட்சியம். நமக்கு மரணம் எப்போது வரும் என்பதை அறியாத நிலையில், முதுமை வரட்டும் என்று காத்திருத்தல் ஆகாது.

‘சத்தியத்தை நாடி நான் செல்லும் யாத்திரையில் அடுத்தபடியாக ஞான குருவரன் ஆலார காலாமரை நான் சந்திக்கவேண்டும். அவரைத் தேடியே நான் இங்கு வந்தேன். இன்றே நான் புறப்படவேண்டும். தங்களுக்குச் சகல மங்களங்களும் உண்டாகட்டும். வான மண்டலத்தில் இருந்துகொண்டு கதிரவன் உலகனைத் திலும் ஒளிபரப்புதல் போல, உங்கள் மேன்மைக் குணங் களால் மக்களுக்கு இன்பம் பெருகுவதாக!’

பிரம்பிசாரப் பெருந்தகை எழுந்து நின்று, அவரைச் சுற்றி வலம் வந்து, இருகையும் கூப்பி வணக்கம் கூறினார். ‘தங்கள் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும்! விரும்பிய சித்தியெல்லாம் பெற்றபின்பு, தாங்கள் என்னை மறவாது மறுபடி என் நாட்டுக்கு எழுந்தருள வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார்.

அறத்தகை முதல்வரும் அவ்வாறே வருவதாக உறுதி சொல்லி விட்டு, ஆங்கிருந்து சென்றார்.